லுாதியானா மோசடி வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு பஞ்சாப் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.தமிழில் ஒஸ்தி திரைப்படத்தின் வாயிலாக ரசிகர்கள் இடையே பிரபலமானவர் சோனு சூட், 51. ஹிந்தி, தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் மீது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் கன்னா என்ற வழக்கறிஞர், அம்மாநிலத்தின் லுாதியானா நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடுத்தார். அந்த மனுவில், 'நடிகர் சோனு சூட்டின் விளம்பரத்தின் வாயிலாக, ரிஜிகா நாணய நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். அதிக வருவாய் கிடைக்கும் எனக்கூறிய நிலையில், நான் முதலீடு செய்த பணத்தையும் அந்நிறுவனம் திரும்ப தராமல் மோசடி செய்தது. 'எனவே, அந்நிறுவனத்தின் உரிமையாளர் மோஹித் சுக்லாவுக்கு எதிராகவும், அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய துாண்டிய நடிகர் சோனு சூட் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இழந்த பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்' என, அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரமன்ப்ரீத் கவுர், நடிகர் சோனு சூட் விசாரணைக்கு ஆஜராக பல முறை சம்மன் பிறப்பித்தும், அவர் ஆஜராகவில்லை.இந்நிலையில், நீதிபதி நேற்று பிறப்பித்த உத்தரவில், 'நடிகர் சோனு சூட்டிற்கு முறையாக சம்மன் அனுப்பப்பட்டும், இதுவரை நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வில்லை.'எனவே, மஹாராஷ்டிராவின் மும்பையில் வசிக்கும் சோனு சூட்டை கைது செய்யும்படி மும்பை போலீசாருக்கு உத்தரவிடுகிறோம். அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' எனக் கூறி, வழக்கை ஒத்திவைத்தார். இதற்கிடையே, நடிகர் சோனு சூட் கூறுகையில், ''ரிஜிகா நாணய நிறுவனத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீதிமன்றத்தில் என் வழக்கறிஞர்கள் வாயிலாக உரிய பதில் அளிப்பேன்,'' என்றார்.