“வெளியுறவுத்துறை அமைச்சர் நான்கைந்து முறை அமெரிக்காவுக்கு சென்று, 'எங்கள் பிரதமரை அழையுங்கள்.. அழையுங்கள்' என்று கேட்கும் நிலை, மாற வேண்டும். இந்தியாவில் தொழில்நுட்ப புரட்சி நிகழ்ந்து, தொழில்நுட்பம் சார்ந்த தரவுகளில் நாம் பலமாக இருந்தால், அமெரிக்க அதிபர் நாம் அழைக்காமலேயே இந்தியாவுக்கு வருகை தர விரும்புவார்,” என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதால், சபையில் கடும் அமளி ஏற்பட்டது.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் துவங்கியது. காலையில் கேள்வி நேரம் துவங்கியதும் மஹா கும்பமேளாவில் புனித நீராடியவர்கள் இறந்த விவகாரம் குறித்து, சபையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் இறங்கின.கேள்வி நேரம் முழுதும் அமளியில் கழிந்ததும், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின் மீது பங்கேற்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேற்று பேசினார். 'மேட் இன் இந்தியா'
அவர் பேசியதாவது:
ஜனாதிபதி உரையில் தேடித்தேடி பார்த்தாலும் உருப்படியாக எதுவுமே தென்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக பேசிய அதே பழைய விஷயங்களையே திரும்ப திரும்ப பேசினார்.'மேட் இன் இந்தியா' திட்டமானது நல்ல யோசனை. இதன் வாயிலாக சிலைகளைப் பார்க்கிறோம். விழாக்களை பார்க்கிறோம். அதேசமயம், இதனால் விளைந்த பயன் என்ன என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை.உற்பத்தித் துறையில் கடந்த 2010ல் 15.3 சதவீதமாக இருந்த வளர்ச்சி வீதம், தற்போது 12.6 சதவீதமாக குறைந்துவிட்டது.இதற்காக பிரதமரை குறை சொல்லமாட்டேன். காரணம், அவர் முயற்சி செய்தார். ஆனால், அதில் தோற்று விட்டார். உற்பத்தித் துறையை முறைப்படுத்தும் ஒரு நாடாக இந்தியா தோல்விஅடைந்துள்ளது. சிறந்த நிறுவனங்களெல்லாம் இருந்தும், உற்பத்தி ஒழுங்குமுறையை சீனாவிடம் ஒப்படைத்து விட்டோம். மொபைல் போனை இந்தியாவில் தயாரித்திருந்தாலும், இதிலுள்ள பாகங்கள் சீனாவுக்குரியவை. எனவே, உற்பத்தி துறையின் மீது, நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களுக்குமான வரியை சீனாவுக்கு தந்து கொண்டிருக்கிறோம். வேலையின்மைக்கான காரணத்தை சரிவர நாம் கையாள வேண்டும்; அதை தெரிவிக்க ஜனாதிபதி உரை தவறிவிட்டது.சீன படைகள் நம் நாட்டிற்குள் வந்துள்ளதை பிரதமர் மறுக்கிறார். நம் ராணுவமோ, இன்னும் அந்நாட்டு ராணுவம் உள்ளே வந்ததற்காக, பேச்சு நடத்தி கொண்டிருக்கிறது.தரவுகளை சேகரிப்பதில் அமெரிக்காவும், சீனாவும் திறமையாக செயல்படுகின்றன.எலக்ட்ரிக் கார்கள், ரோபோ, ட்ரோன்கள் என எலக்ட்ரானிக் துறையில் எதை எடுத்தாலும், அதுகுறித்த தரவுகளை ஏராளமாக சேகரித்து வைத்திருப்பதாலேயே சீனா ஏ.ஐ.,யில் சிறந்து விளங்குகிறது.இந்தியாவில் தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட கடைசி புரட்சி, கம்ப்யூட் டர் புரட்சி தான். கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, வாஜ்பாய் உட்பட பலரும் ஏற்கவில்லை; மாறாக சிரித்தனர். எல்லாவற்றையும் தாண்டி அது வெற்றி பெற்றது.தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டு, உற்பத்தி தரவுகள் நிறைய இருந்தால் தான், உலக நாடுகள் மத்தியில் நமக்கு மதிப்பு உருவாகும். இங்கிருந்து நம் வெளியுறவு அமைச்சரை அமெரிக்காவுக்கு அனுப்பி, 'எங்கள் பிரதமரை அழையுங்கள்... அழையுங்கள்' என்று கேட்கத் தேவையில்லை. நம் தொழில்நுட்ப துறையில் உற்பத்தி தரவுகள் இருந்தால், அந்நாட்டு அதிபர் இந்தியாவிற்கு தானாகவே வருகை தருவார்.இவ்வாறு ராகுல் கூறியதும், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குறுக்கிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ராகுல், ''நான் பேசியது உங்களை கலவரப்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்,'' என்றார்.தொடர்ந்து பேசிய ராகுல், ''தெலுங்கானாவில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி, 90 சதவீதம் பேர் தலித், பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என தெரியவந்துள்ளது. ஆனாலும் அதிகார அமைப்புகளில் இவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை. மஹாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலுக்கும், சட்டசபைத் தேர்தலுக்கும் இடைப்பட்ட ஐந்து மாத காலத்திற்குள் 70 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பா.ஜ., வெற்றி பெற்ற தொகுதிகளில் இது நடந்துள்ளது என்பது தரவுகள் வாயிலாக தெரிகிறது. இதற்கு தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன: தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு இடமில்லை என்று ஆனதன் விளைவுகள்தான் இவை.இவ்வாறு அவர் பேசினார்.
வேலைவாய்ப்பில் தோல்வி
வேலையின்மை என்பது சர்வதேச அளவிலான பிரச்னை. அதை நம்மால் சரிவர கையாள முடியாது. ஏற்கனவே இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சி, இப்போதுள்ள தே.ஜ., கூட்டணி ஆட்சி, என இரண்டுமே வேலையின்மை பிரச்னை குறித்த சரியான விளக்கத்தை தரவில்லை.ராகுல்லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,
உரிமை மீறல் தீர்மானம்!
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் பேச்சுக்கு, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, லோக்சபாவில் மறுப்பு தெரிவித்தார்.''எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இதுபோன்ற பொய் தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர், சபையில் கூறக் கூடாது. இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்பான முக்கிய விஷயமாகும். மேலும், பிரதமர் பதவி, பார்லிமென்ட் மற்றும் நம் நாட்டின் மரியாதை தொடர்பானது,'' என, அவர் கூறினார்.லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்த கிரண் ரிஜிஜு, தன் பேச்சுக்கான ஆதாரங்களை ராகுல் அளிக்கும்படி உத்தரவிட வேண்டும். அல்லது சபை குறிப்பில் இருந்து அவருடைய பேச்சை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இந்த விவகாரம் தொடர்பாக, ராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம் தாக்கல் செய்வதற்கு, பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
'நாட்டை அவமதிக்கிறார் ராகுல்'
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:நான் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று, பதவியில் இருந்து விலகும் அதிபர் ஜோ பைடன் அரசின் வெளியுறவு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து பேசினேன். அதன்பின், புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் சந்தித்து பேசினேன்.எந்த ஒரு நிலையிலும், டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பது குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், அழைப்பு விடுக்கும்படி கேட்டதாக ராகுல் கூறியுள்ளார்.அரசியல் ரீதியில், இது போன்ற பொய்களை ராகுல் கூறலாம். ஆனால், அது வெளிநாடுகளில் நம் நாட்டை அவமதிப்பதாக அமைகிறது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். சாதாரணமாக இதுபோன்று வெளிநாட்டு தலைவர்கள் பதவியேற்பில் பிரதமர் பங்கேற்பதில்லை. அவருடைய சார்பில் சிறப்பு பிரதிநிதிகளையே அனுப்புகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது டில்லி நிருபர் -