இளைஞர்களை வன்முறைக்கு துாண்ட ராகுல் சதி!; நேபாளம் போல நம் நாட்டை மாற்ற முயற்சிப்பதா?
''இளைஞர்களிடம் எதிர்மறை எண்ணத்தை விதைப்பது சரியல்ல. நேபாளத்தை போல நம் நாட்டை மாற்ற ராகுல் முயற்சிக்கிறார். இளம் தலைமுறையினர் கொதித்தெழுந்தால், நாட்டை விட்டு அவர் தான் வெளியேற வேண்டியிருக்கும்,'' என, லோக்சபா பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே ஆவேசமாக தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிராவில், 2024 நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. 50 இடங்களை கூட கைப்பற்றாமல் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்., கூட்டணி இழந்தது. அப்போது முதல், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறார். இதை தேர்தல் கமிஷனும் மறுத்து வருகிறது. சமீப காலமாக, தேர்தல் முறைகேடு என்ற வார்த்தைக்கு பதில், 'ஓட்டு திருட்டு' என்ற சொல்லாடலை ராகுல் பயன்படுத்தி வருகிறார். கண்டனம்
டில்லியில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை தனிநபர்கள் நீக்குவதாகவும், பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் உடந்தையாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். இதை திட்டவட்டமாக மறுத்த தேர்தல் கமிஷன், 'ராகுலின் குற்றச்சாட்டு அபத்தமானது; அடிப்படை ஆதாரமற்றது' என்றது. இதைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தில் ராகுல் வெளியிட்ட பதிவில், 'ஜென் ஸி எனப்படும், 2,000ம் ஆண்டுக்கு பின் பிறந்த நம் இளைஞர்கள், மாணவர்கள், இளம் தலைமுறையினர் அரசியலமைப்பை காப்பாற்றுவர்; ஜனநாயகத்தை பாதுகாப்பர்; ஓட்டு திருட்டை தடுப்பர். அவர்களுடன் நான் என்றும் துணை நிற்பேன்' என, குறிப்பிட்டிருந்தார். நம் இளைஞர்களை வன்முறைக்கு துாண்டுவதாக ராகுலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நம் அண்டை நாடான நேபாளத்தில், சமீபத்தில் ஜென் ஸி இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. பார்லி., கட்டடம், அரசு அலுவலகங்கள் தீக்கிரையாகின. பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். இந்த கலவரத்தில், 51 பேர் உயிரிழந்தனர். இளைஞர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, இடைக்கால பிரதமரானார். அந்த வகையில் நம் நாட்டிலும் கலவரம் நடக்க இளைஞர்களை குறிப்பாக மாணவர்களை ராகுல் துாண்டுவதாக பா.ஜ., தலைவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இது குறித்து, லோக்சபா பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே கூறியதாவது:
குடும்ப அரசியல், ஊழல் மற்றும் சித்தாந்த தெளிவின்மைக்கு எதிராக இளம் தலைமுறையினர் உள்ளனர். வாரிசு அரசியலை எதிர்க்கும் அவர்கள், நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா வழியில் அரசியலுக்கு வந்த ராகுலை எதற்காக ஆதரிக்கப் போகின்றனர்? அவர்கள் ஊழலை எதிர்க்கின்றனர். அவர்கள் ஏன் ராகுலை வெளியேற்ற மாட்டார்கள்? இளம் தலைமுறையினர் கொதித்தெழுந்தால், இந்நாட்டை விட்டு ராகுல் தான் வெளியேற வேண்டியிருக்கும். வங்கதேசத்தில் இஸ்லாம்; நேபாளத்தில் ஹிந்து ஆட்சியை அவர்கள் விரும்பினர். அவர்கள் ஏன் இந்தியாவை ஹிந்து தேசமாக மாற்ற மாட்டார்கள்? நாட்டை விட்டு வெளியேற மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொள்ளுங்கள் ராகுல். இளம் தலைமுறையினர் வந்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் காட்டமாகக் குறிப்பிட்டார். பின்விளைவுகள்
பா.ஜ., மூத்த தலைவரும், பார்லி., விவகார அமைச்சருமான கிரண் ரிஜிஜு கூறுகையில், ''நம் நாடு பற்றி பாக்., என்ன மாதிரியான கருத்துருவாக்கத்தை கட்டமைக்கப் பார்க்கிறதோ, அதையே, ராகுலும், அவரது கூட்டாளிகளும் இங்கு முன்மொழிகின்றனர். '' ராகுலின் பேச்சுக்கள் கவலையளிக்கின்றன. தேச பாதுகாப்பில், அவரது பேச்சுக்கள், தவறான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. ''தேர்தல்களில் திரும்ப திரும்ப தோற்றுக் கொண்டே இருக்கிறீர்கள். எனவே, உங்களது பலவீனத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களது தலைமைக்கான தோல்வி என்பதையும் ஒப்புக் கொள்ளுங்கள். ''அதை விட்டு விட்டு, அரசியலமைப்பின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்புகள் மீது, கோபத்தை காட்டுவது சரியில்லை,'' என்றார். என்ன மனநிலை இது? உள்நாட்டு போரை துாண்டி விட ராகுல் முயற்சிக்கிறார். நகர்ப்புற நக்சலின் மொழியை அவர் பேசுகிறார். தேர்தலில் மக்கள் ஓட்டளிக்காததால், விரக்தியில், வன்முறையை துாண்டி விட்டு ஆதாயம் தேட அவர் பார்க்கிறார். என்ன மாதிரியான மனநிலை இது? - தேவேந்திர பட்னவிஸ், மஹாராஷ்டிர முதல்வர், பா.ஜ.,
ராகுலின் நேற்றைய குற்றச்சாட்டு
சமூக வலைதளத்தில் ராகுல் வெளியிட்ட பதிவு: காலை 4:00 மணிக்கு எழுந்திருங்கள். 36 வினாடிகளில், 2 வாக்காளர்களை நீக்குங்கள். பின், மீண்டும் துாங்கச் செல்லுங்கள். ஓட்டு திருட்டு இப்படித்தான் நடந்தது. இச்சம்பவங்களின் போது, தேர்தல் கமிஷன் விழித்திருந்து, இந்த ஓட்டு திருட்டை பார்த்தது; திருடர்களை பாதுகாத்தது. ஓட்டு திருடர்களின் பாதுகாவலராக தேர்தல் கமிஷன் உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
ராகுலால் மன உளைச்சல்
ஓட்டு திருட்டு தொடர்பாக, டில்லியில் சமீபத்தில் நிருபர்களை சந்தித்த ராகுல், காட்சி விளக்கப்படத்தில், நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருசில வாக்காளர்களின் புகைப்படங்களையும், அவர்களின் மொபைல் போன் எண்களையும் காண்பித்தார். இதில், உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜைச் சேர்ந்த அஞ்சனி மிஸ்ரா என்பவரின் மொபைல் எண் இடம் பெற்றது. இந்நிலையில், அஞ்சனி மிஸ்ரா கூறுகையில், ''நான் ஒருபோதும் மஹாராஷ்டிராவுக்கு சென்றதில்லை. என் மொபைல் எண் எப்படி இடம்பெற்றது என தெரியவில்லை. எனக்கு பல்வேறு நபர்களிடம் இருந்து அழைப்புகள் வருகின்றன. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசில் புகார் அளிக்க உள்ளேன்,'' என்றார்.- நமது டில்லி நிருபர் -