குதிரை பந்தய கிளப்பில் ரெய்டு ரூ.2 கோடி சிக்கியது
சேஷாத்ரிபுரம்: பெங்களூரு குதிரை பந்தய கிளப்பில், சி.சி.பி., எனும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், இரண்டு கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது.சேஷாத்ரிபுரம் ரேஸ்கோர்ஸ் சாலையில், பெங்களூரு குதிரை பந்தய கிளப் உள்ளது. இந்த கிளப்பில் நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தை விட, அதிக விலைக்கு விற்றதாகவும், ஜி.எஸ்.டி. செலுத்தாமல் 3.47 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.சி.பி., எனும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கவனத்திற்கும் சென்றது.இந்நிலையில் குதிரை பந்தய கிளப்பில் நேற்று காலை, சி.சி.பி., போலீசார், அதிரடி சோதனை நடத்தினர். டிக்கெட் கவுன்ட்டரில் இருந்தவர்கள் வெளியே செல்லாத முடியாதபடி, கவுன்ட்டர்களுக்கு போலீசார் பூட்டுப் போட்டனர். பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த, டிக்கெட் கவுன்ட்டர்களில் நடத்திய சோதனையில், இரண்டு கோடி ரூபாய் சிக்கியதாகவும், பணத்தை பறிமுதல் செய்து, போலீசார் எடுத்துச் சென்றதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.