உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மத்திய தகவல் ஆணையராக ராஜ் குமார் கோயல் பதவியேற்பு

 மத்திய தகவல் ஆணையராக ராஜ் குமார் கோயல் பதவியேற்பு

புதுடில்லி: மத்திய தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜ் குமார் கோயல் நேற்று பதவியேற்றார். மத்திய தகவல் ஆணையராக இருந்த ஹீராலால் சமாரியாவின் பதவிக்காலம், செப்., 13ல் முடிவடைந்த நிலையில், இரு மாதங்களாக அப்பதவி காலியாக இருந்தது. புதிய தகவல் ஆணையரை தேர்வு செய்ய, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், மத்திய தகவல் ஆணையராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜ் குமார் கோயலை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, மத்திய தகவல் ஆணையராக அவரை மத்திய அரசு நியமித்தது. மேலும், ஜெயா வர்மா சின்ஹா, சுவகாட் தாஸ், சஞ்சீவ் குமார் ஜிண்டால், சுரேந்திர சிங் மீனா உள்ளிட்ட எட்டு பேர், தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில், மத்திய தகவல் ஆணையராக ராஜ் குமார் கோயல் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த 1990 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜ் குமார் கோயல், மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீதித் துறை செயலராக பணியாற்றி, கடந்த ஆக., 31ல் தான் ஓய்வு பெற்றார். மத்திய அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். மத்திய தகவல் ஆணையத்தில், தலைமை ஆணையர், 10 தகவல் ஆணையர்கள் வரை இருக்கலாம். ஏற்கனவே இரு தகவல் ஆணையர்கள் உள்ள நிலையில், மத்திய தகவல் ஆணையர் ராஜ் குமார் கோயல், தகவல் ஆணையர்கள் எட்டு பேர் நியமனத்தை அடுத்து, ஒன்பது ஆண்டுகளுக்குப் பின், தகவல் ஆணையம் முழு பலத்தை எட்டி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ