ராஜ்யசபா எம்.பி., பதவிகள் காங்.,கில் யாருக்கு வாய்ப்பு?
பெங்களூரு: பிப்ரவரியில் நடக்கவுள்ள, ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சீட் பெற, சங்கர், ஆர்த்தி இடையே பலத போட்டி எழுந்துள்ளது. சங்கருக்கு சீட் அளிக்க, மாநில காங்கிரஸ் தலைவருமான, துணை முதல்வர் ஆர்வம் காண்பிக்கிறார்.கர்நாடக சட்டசபையில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் ஹனுமந்தையா, நாசிர் ஹுசேன், சந்திரசேகர், பா.ஜ., உறுப்பினர் ராஜிவ் சந்திரசேகரின் பதவிக் காலம், ஏப்ரல் 2ல் முடிவடைகிறது. இவர்களால் காலியாகும் இடத்துக்கு, பிப்ரவரி 27ல் தேர்தல் நடக்கவுள்ளது. 5வது வேட்பாளர்
சட்டசபை எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை பலம் அடிப்படையில், காங்கிரஸ் மூன்றும், பா.ஜ., ஒரு இடத்தையும் கைப்பற்றலாம். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சிகள், காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை ஈர்த்து, ஐந்தாவது வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டுள்ளன.பதவி காலம் முடிவடையும் காங்கிரசின் மூன்று உறுப்பினர்களில், ஒருவர் ஒக்கலிகர், மற்றொருவர் தலித், மூன்றாமவர் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இம்முறையும் அந்தந்த சமுதாயத்தினருக்கு, சீட் வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தல் எழுந்துள்ளது.ஆனால் சிலர், ஏற்கனவே பதவி பெற்ற சமுதாயத்தினருக்கு, மீண்டும் வாய்ப்பளிக்க கூடாது. இதுவரை வாய்ப்பு கிடைக்காத சமுதாயங்களுக்கு, வாய்ப்பளிக்க வேண்டும்' என, மன்றாடுகின்றனர்.முன்னாள் எம்.எல்.சி., சங்கர், என்.ஆர்.ஐ., பிரிவு துணைத் தலைவி ஆர்த்தி கிருஷ்ணா, ராஜ்யசபா சீட் எதிர்பார்க்கின்றனர். காங்கிரசில் இணைந்த பின், சங்கருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை. முற்போக்கு சிந்தனை
மாநில காங்கிரஸ் தலைவராக யார் இருந்தாலும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்றுகிறார். முற்போக்கு சிந்தனை கொண்ட அரசியல்வாதி. எனவே அவருக்கு ராஜ்யசபா சீட் வழங்கலாமா என, காங்கிரஸ் ஆலோசிக்கிறது.மாநில தலைவர் சிவகுமாரும், சங்கரின் பெயரை முன் மொழிந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நாசிர் ஹுசேன், சந்திரசேகர், ஹனுமந்தையாவும் பதவியை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.