விஜயேந்திராவை மாற்ற வேண்டும் ரமேஷ் ஜார்கிஹோளி வலியுறுத்தல்
பெலகாவி: “மாநிலத் தலைவர் பதவியை விஜயேந்திராவால் நிர்வகிக்க முடியவில்லை. அவரை உடனடியாக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்,” என, முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி வலியுறுத்தினார்.பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:விஜயேந்திராவுக்கு ஜீன்ஸ் பேன்ட், டி - ஷர்ட் அணிந்து நடமாடும் வயது. இவரால் மாநில பா.ஜ., தலைவர் பதவியை நிர்வகிக்க முடியவில்லை. அவரை உடனடியாக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பிறவி போராளி. ஆனால் விஜயேந்திரா, எடியூரப்பாவின் கால் துாசிக்கு சமம் அல்ல. விஜயேந்திரா இளையவர். இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு பின், மாநிலத் தலைவர் பதவியை அளித்திருக்க வேண்டும்.என்னையோ அல்லது பசனகவுடா பாட்டீல் எத்னாலையோ, மாநிலத் தலைவராக்க தேவையில்லை. ஒரே சமுதாயத்தினருடன் முடங்கிக் கிடக்கும் தலைவர், எங்களுக்கு தேவையில்லை. அனைவரையும் சமமாக பார்க்கும் திறன் உள்ளவருக்கு, தலைவர் பதவி வழங்குங்கள்.பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வந்தது. நாங்கள் அவருக்கு பக்கபலமாக நிற்போம். மேலிட தலைவர்களின் மனதை கரைப்போம். தனக்கு ஆதரவாக நிற்கும்படி, பிற்படுத்தப்பட்ட பிரிவு தலைவர்களை, விஜயேந்திரா மிரட்டுகிறார். அவருடன் உள்ள பெரும்பாலான தலைவர்கள், பிற்படுத்தப்பட்ட தலைவர்கள். லிங்காயத்துகள், ஒக்கலிகர் யாரும் இல்லை.அரசியலில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் நோக்கில், ரேணுகாச்சார்யா, விஜயேந்திராவுக்கு ஆதரவாக பேசுகிறார். யாரை மாநிலத் தலைவராக்க வேண்டும் என, நாங்கள் பகிரங்கமாக கூறவில்லை. ஆலோசனை கூட்டம் நடத்தினால், எங்கள் கருத்தை கூறுவோம்.டில்லியில் நாங்கள் பா.ஜ., தலைவர்களை சந்திக்க மாட்டோம். புகாரும் அளிக்க மாட்டோம். வக்பு வாரிய விவகாரம் தொடர்பாக, பார்லிமென்ட் இணை கமிட்டியிடம் அறிக்கை அளிப்பதற்காக செல்கிறோம். பா.ஜ., மேலிடத்தை சந்திப்பதற்காக அல்ல.இவ்வாறு அவர்கூறினார்.