உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் தொடர்புள்ளவர் பாக்.,கில் தலைமறைவு

ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் தொடர்புள்ளவர் பாக்.,கில் தலைமறைவு

பெங்களூரு: பெங்களூரின், 'ராமேஸ்வரம் கபே' குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி, பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.பெங்களூரு புரூக்பீல்டில், ராமேஸ்வரம் கபே உள்ளது. கடந்த மார்ச் 1ம் தேதி குண்டுவெடிப்பு நடந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர்.

மூளைச்சலவை

இதுதொடர்பாக, விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு குழு, நால்வரை கைது செய்திருந்தது. சமீபத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.இதில் உள்ள விபரங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை வருமாறு:மங்களூரில் குக்கர் குண்டுவெடிப்பு நடத்திய தாஹா மற்றும் சாஜிப் தலைமறைவாகினர்.சில மாதங்களுக்கு பின், மீண்டும் பெங்களூரு வந்தனர். அப்போது, இவர்களுக்கு, மெஜஸ்டிக் அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய முஜாபுல் ஷெரீப் அறிமுகமானார்.முஜாபுல் ஷெரீப்பை தாஹாவும், சாஜிபும் 'மூளைச்சலவை' செய்து, ஐ.சி.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்த்தனர். முதற்கட்டமாக ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தும் வேலையை அவரிடம் ஒப்படைத்தனர். 2023 டிசம்பரில் பா.ஜ., அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நடத்த, சாஜிப் திட்டம் தீட்டினார்.

குற்றப்பத்திரிகை

சென்னையின் திருவல்லிக்கேணியில் வாடகை வீட்டில் தங்கி, அவர் வெடிகுண்டு தயாரித்துள்ளார். 2024 ஜனவரி 22ல் வெடிகுண்டுடன் பெங்களூரு வந்தார்.மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலக பின் பகுதியில் குண்டுவைத்தார். 'டைம் செட்' செய்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக குண்டுவெடிக்கவில்லை; சாஜிப் சென்னைக்கு ஓட்டம் பிடித்தார்.பா.ஜ., அலுவலகத்தில் வைத்த குண்டு வெடிக்காததால், மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் குண்டுவெடிப்பு நடத்த அவர் திட்டமிட்டார். வேறொரு குண்டு தயாரித்து கொண்டு, பிப்ரவரி 29ல் பெங்களூரு வந்தார். கே.ஆர்.புரம் டின் பேக்டரி அருகில், ராமேஸ்வரம் கபேவில் குண்டு வைத்துவிட்டுத் தப்பினார். இவ்வாறு குற்றப்பத்திரிகையில் விவரிக்கப்பட்டுள்ளது.இவருக்கு திட்டம் தீட்டுவதில் உதவிய பைசல் என்பவர், பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை