விராட் கோலியை மீண்டும் கேப்டனாக பார்க்க ஆசைப்படும் ஆர்.சி.பி., ரசிகர்கள்
ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டிகள், ஆண்டுக்கு ஒருமுறை ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படுகிறது. இதில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும் இந்திய, வெளிநாட்டு வீரர்கள் கைகோர்த்து விளையாடுகின்றனர்.ஐ.பி.எல்., போட்டிகளில் பெரும்பாலான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த அணியாக இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிகள் தான். இதற்கு காரணம் சென்னை அணியில் தோனியும், பெங்களூரு அணியில் விராட் கோலியும் இருப்பதுதான். 2008 முதல்
ஒவ்வொரு ஆண்டும் போட்டிகள் துவங்கும் முன்பு வீரர்கள் வெவ்வேறு அணிகளுக்கு ஏலம் எடுக்கப்படுவர். ஆனால் 2008 முதல் வேறு எந்த அணிக்கும் மாறாமல், பெங்களூரு அணியிலேயே விராட் கோலி நீடிக்கிறார்.கடந்த 2013 முதல் 2021 வரை அணியின் கேப்டன் ஆகவும் இருந்தார். பெங்களூரு அணி இதுவரை கோப்பையை கைப்பற்றியதே இல்லை. விராட் கோலி, க்ரிஷ் கெயில் உள்ளிட்ட உலக தரம் வாய்ந்த வீரர்கள் விளையாடியும் கோப்பையை கைப்பற்றாதது தான் பெரிய சோகம்.ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி துவங்கும் ஆர்.சி.பி., ரசிகர்கள் 'ஈ சாலா கப் நம்தே' என்ற வசனத்தை பேச ஆரம்பித்து விடுவர். ஆனால் அவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும். பாப் டூ பிளிசிஸ்
அணி கோப்பையை வெல்லாததால், 2022 ஐ.பி.எல்., போட்டிக்கு முன்பு கேப்டன் பதவியை விராட் கோலி துறந்தார். புதிய கேப்டனாக பாப் டூ பிளிசிஸ் பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இரண்டு சீசனில் பெங்களூரு அணி விளையாடியது. ஆனாலும் கோப்பை கிடைக்கவில்லை.தற்போது பாப் டூ பிளிசிஸ் 40 வயதாகிவிட்டது. அவரை கேப்டனாக நீடிக்க வைக்க பெங்களூரு அணி நிர்வாகத்திற்கு விருப்பமில்லை. இதனால் மாற்று கேப்டனை நிர்வாகம் தேடுகிறது.அடுத்த கேப்டனாக மீண்டும் விராட் கோலி நியமிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. பெங்களூரு ரசிகர்களும், விராட் கோலி மீண்டும் கேப்டனாக வேண்டும். அவரது தலைமையில் ஆர்.சி.பி., கோப்பையை தட்டித்துாக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.பாப் டூ பிளிசிஸ் கேப்டனாக இருந்தாலும், விராட் கோலியை தான், கேப்டனாக நாங்கள் பார்த்தோம். மீண்டும் அவரை கேப்டனாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் தங்களது விவாதங்களை துவக்கி உள்ளனர் - நமது நிருபர் -.