உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு கிரிக்கெட் மைதான கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி., தான் பொறுப்பு

பெங்களூரு கிரிக்கெட் மைதான கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி., தான் பொறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'பெங்களூரு கிரிக்கெட் மைதான கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு, ஆர்.சி.பி., அணி தான் பொறுப்பு' எனக் குறிப்பிட்ட மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், 'போலீசார் கடவுளோ அல்லது மந்திரவாதியோ அல்ல' என தெரிவித்தது. ஐ.பி.எல்., டி - 20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில், ஆர்.சி.பி., எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணி முதன்முறையாக கோப்பை வென்றது. இதை கொண்டாடும் வகையில், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பெங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த தயானந்தா, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் விகாஷ் குமார் விகாஷ், சேகர் எச்.தேக்கண்ணவர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதை எதிர்த்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் பெங்களூரு கிளையில், விகாஷ் குமார் விகாஷ் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதி பி.கே.ஸ்ரீவஸ்தவா, நிர்வாக உறுப்பினர் சந்தோஷ் மெஹ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மற்றும் முன் அனுமதி பெறாமல், வெற்றி கொண்டாட்டத்தை ஆர்.சி.பி., அணி சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே, சின்னசாமி மைதானத்தில் மக்கள் அதிகளவில் குவிந்தனர். நேரமின்மையால் போலீசாரால் ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை.மேலும், சட்டசபை வளாகத்திலும் மற்றொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால், போலீசாரின் முழு கவனமும் அங்கேயே இருந்தது. போலீசாரும் மனிதர்கள் தான். அவர்கள் கடவுளோ அல்லது மந்திரவாதியோ அல்ல. ஒரு விரலை நீட்டுவதால் எல்லாம் உடனே மாறிவிடப் போவதில்லை. ஒருங்கிணைப்பு இல்லாமல் அவசர கதியில் ஆர்.சி.பி., அணி அறிவிப்பு வெளியிட்டதே, 11 பேர் உயிரிழந்ததற்கு காரணம். இதற்கு அந்த அணி தான் முழு பொறுப்பு. எனவே, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி விகாஷ் குமார் விகாஷின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மற்ற இருவரின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறுவது குறித்து, மாநில அரசு பரிசீலிக்கலாம். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 02, 2025 06:29

ஆமா ஆமா அவர்களுக்கு தான் சீப் பப்லிசிட்டி தேவை இல்லையா காங்கிரஸ் மக்களே


புதிய வீடியோ