வக்ப் சொத்து பதிவுக்கான காலக்கெடுவை நீட்டிக்க மறுப்பு: தீர்ப்பாயத்தை அணுகும்படி அறிவுறுத்தல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
வக்ப் வாரிய சொத்துக்களை பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் நிவாரணம் வேண்டுமெனில், வக்ப் தீர்ப்பாயத்தை அணுகுமாறு அறிவுறுத்திஉள்ளது. பார்லி.,யில் கடும் எதிர்ப்புக்கு இடையே, வக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. மேலும், வக்ப் வாரிய சொத்து விபரங்களை பதிவு செய்ய, 'உமீத்' என்ற இணையதளத்தையும் கடந்த ஜூன் 6ம் தேதி மத்திய அரசு துவக்கியது. இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படாத வக்ப் சொத்துக்கள் சர்ச்சைக்குரிய சொத்தாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சொத்து விபரங்களை பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி, பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ''வக்ப் சொத்துக்களை பதிவு செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மிகவும் குறுகியது. 50 முதல் 100 ஆண்டுகளுக்கு முன் வக்ப் வாரியத்திற்கு சொத்து எழுதி கொடுத்தவர்களின் பெயர்களை கண்டறிவது என்பது நடைமுறையில் சிக்கலானது. ''இதை கண்டறிவதற்கே நிறைய காலம் பிடிக்கும். தவிர இந்த விபரங்கள் இல்லாமல் இணையதளத்தில் சொத்துக்களை பதிவு செய்ய முடியாது. மேலும், பெரும்பாலான சமயங்களில் இணையதளம் சரியாக வேலை செய்வதும் இல்லை,'' என வாதாடினார். அவரது வாதத்தை ஏற்க மறுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வக்ப் சொத்துக்களை பதிவு செய்யும் விவகாரத்தில் தனி நபர்கள் சிலரே மனுத் தாக்கல் செய்துள்ளனர். இணையதளம் முறையாக இயங்கவில்லை எனில், இதற்கென ஏற்கனவே உருவாக்கப்பட்ட வக்ப் தீர்ப்பாயத்தில் முறையிடுங்கள். அவர்கள் ஒவ்வொரு வழக்கையும் விசாரித்து அதற்கேற்றபடி முடிவு செய்வர். இதற்கென தனி தீர்ப்பாயம் இருக்கும்போது, அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உச்ச நீதிமன்றம் ஏன் தலையிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.