உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னகிரி போலீஸ் ஸ்டேஷன் மீது உறவினர்கள் கல்வீச்சு!: விசாரணையின்போது வாலிபரை கொன்றதாக கூறி ஆவேசம்

சென்னகிரி போலீஸ் ஸ்டேஷன் மீது உறவினர்கள் கல்வீச்சு!: விசாரணையின்போது வாலிபரை கொன்றதாக கூறி ஆவேசம்

தாவணகெரே: விசாரணையின்போது வாலிபரை கொன்றதாகக் கூறி ஆவேசம் அடைந்து, சென்னகிரி போலீஸ் ஸ்டேஷன் மீது, உறவினர்கள் கல்வீசி தாக்கினர். இதில், 11 போலீசார் படுகாயம் அடைந்தனர். போராட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டதால், இரண்டு போலீஸ் ஜீப்புகள் கடும் சேதம் அடைந்தன.11 போலீசார் படுகாயம்; இரண்டு ஜீப்புகள் கடும் சேதம்தாவணகெரே மாவட்டம், சென்னகிரி டவுன் திப்புநகரை சேர்ந்தவர் கலிமுல்லா. இவரது மகன் ஆதில், 32. இவருக்கு திருமணம் முடிந்து, ஹீனா என்ற மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர். ஆதில் தச்சு வேலை செய்து வந்தார். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின்படி, ஆதிலை நேற்று முன்தினம் இரவு சென்னகிரி போலீசார், போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.போலீஸ் நிலையத்திற்குள் சென்ற, சில நிமிடங்களிலேயே குறைந்த ரத்த அழுத்தத்தால், ஆதில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த போலீசார், ஆதிலை மீட்டு, சென்னகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதுபற்றி ஆதிலின் குடும்பத்தினருக்கு, சென்னகிரி போலீசார் தகவல் கொடுத்தனர்.

பொருட்கள் சூறை

இதையடுத்து சென்னகிரி போலீஸ் நிலையம் முன், ஆதிலின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஒன்று கூடினர். விசாரணை என்ற பெயரில் அழைத்து வந்து, ஆதிலை அடித்துக் கொன்றதாக போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தினர்.உடல்நலக்குறைவால் அவர் இறந்துவிட்டதாக விளக்கம் அளித்தனர். போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில், பதிவான காட்சிகளையும் காண்பித்தனர். இதனால் போராட்டம் நடத்தியவர்கள் சமாதானம் அடைந்தனர்.இந்த நேரத்தில் போலீஸ் நிலையத்தின் வெளியே நின்ற ஆதிலின் உறவினர்கள் சிலர், போலீஸ் நிலையம் மீது திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதில் ஜன்னால் கண்ணாடிகள் உடைந்தன. பின்னர் போலீஸ் நிலையத்திற்குள் அத்துமீறி புகுந்து, அங்கு இருந்த பொருட்களை, துாக்கிப் போட்டு உடைந்து சூறையாடினர். இதை தடுக்க முயன்ற போலீசார் மீதும், கல்வீசி தாக்கினர். இதில் 11 போலீசார் காயம் அடைந்தனர்.அதன்பின்னர் போலீஸ் நிலைய வளாகத்திற்குள் நின்ற, இரண்டு போலீஸ் ஜீப்புகளை கவிழ்ந்துவிட்டனர். இதில் ஜீப்புகள் பலத்த சேதம் அடைந்தன. மேலும் ஐந்து ஜீப்புகள் மீது, கல்வீசி கண்ணாடிகளை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.இதுபற்றி அறிந்ததும் தாவணகெரே எஸ்.பி., உமா பிரசாத், சென்னகிரி போலீஸ் நிலையம் வந்து, சேதங்களை பார்வையிட்டார். காயம் அடைந்த போலீசாருக்கும் ஆறுதல் கூறினார். அசம்பாவித சம்பவங்களை தடுக்க, சென்னகிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

பிரேத பரிசோதனை

நேற்று காலை ஆதிலின் தந்தை கலிமுல்லா கூறுகையில், ''என் மகனுக்கு உடல்நலக்குறைவு இருந்தது, உண்மை தான். போலீசார் கொல்லவில்லை. எங்கள் குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும்,'' என்றார்.ஆனால் நேற்று மாலை அவர் அளித்த பேட்டியில், '' என் மகனை போலீசார் அடித்துக் கொன்றுவிட்டனர். போலீஸ் மீது இருந்த பயத்தால், உடல்நலக்குறைவால் மகன் இறந்ததாக கூறினேன். என் மகன் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை. அவருக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை,'' என்றார்.தாவணகெரே எஸ்.பி., உமா பிரசாத் கூறியதாவது:போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்த, ஆறு முதல் ஏழு நிமிடங்களில் ஆதில் குறைந்த ரத்த அழுத்தத்தால் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் இறந்துவிட்டார். அவரின் உறவினர்கள் போலீஸ் நிலையம் முன், போராட்டம் நடத்தினர். உண்மை சம்பவத்தை விளக்கியதும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஒரு கும்பல், போலீஸ் நிலையம் மீது கல்வீசி உள்ளது. இதுதொடர்பாக நான்கு வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆதில் உடல் பிரேத பரிசோதனை, நீதிபதி முன்னிலையில் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த சம்பவம் குறித்து மைசூரில் முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டியில், ''சென்னகிரி வாலிபர் ஆதில் மரணம், 'லாக் அப் டெத்' இல்லை. அவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. போலீஸ் நிலையம் சென்றதும், மயங்கி விழுந்துள்ளார். சிகிச்சைக்கு அனுமதித்தும் இறந்துவிட்டார். எனினும் இந்த வழக்கு தொடர்பாக சென்னகிரி டி.எஸ்.பி., பிரசாந்த் மனவள்ளி, சென்னகிரி இன்ஸ்பெக்டர் நிரஞ்சனை 'சஸ்பெண்ட்' செய்துள்ளோம்,'' என்றார்.சென்னகிரி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சட்டம் - ஒழுங்கு

மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறுகையில், ''பீகாரில் லாலுபிரசாத் ஆட்சியில் நடந்தது போன்று, கர்நாடகாவில் தற்போது நடக்கிறது. தவறு செய்யும் முஸ்லிம்கள் மீது, அரசு கருணை காட்டியதன் விளைவு தான், சென்னகிரி போலீஸ் நிலையம் மீதான தாக்குதல். ''உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது,'' என்றார்.இதற்கிடையில் நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்ததும், ஆதிலின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ