நடிகர் திலீப்புக்கு முன்னுரிமை தரவில்லை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
சபரிமலை:சினிமா நடிகர் திலீப்புக்கு சபரிமலை தரிசனத்திற்கு போலீஸ் எந்த முன்னுரிமையும் வழங்கவில்லை என்று கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுகடந்த ஐந்தாம் தேதி சபரிமலை தரிசனத்திற்கு வந்த நடிகர் திலீப் முன் வரிசையில் சிறப்பு தரிசன வசதி செய்து கொடுத்ததையும் அதற்காக பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதையும் கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.நீதிமன்ற உத்தரவின்படி சபரிமலை போலீஸ் தனி அதிகாரி பிஜோய் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஹரிவராசனம் பாடல் பாடும் நேரத்தில் அங்கு பணியில் இருந்த இரண்டு தேவசம் காவலர்கள் திலீப் மற்றும் அவருடன் வந்தவர்களை முதல் வரிசையில் நிற்க அனுமதி வழங்கினர். இங்கு முடிவுகள் எடுப்பது தேவசம் காவலர்கள் தான். போலீசுக்கு இங்கு எந்த பொறுப்பும் இல்லை. திலீப் சன்னிதானத்தில் வருவது தொடர்பாக தங்களுக்கு எந்த முன் தகவலும் இல்லை. பம்பையில் அவருக்கு எந்த முன்னுரிமையும் வழங்கப்படவில்லை.கோயில் நிர்வாக அதிகாரி, துணை செயல் அலுவலர் ஆகியோருடன் சேர்ந்து திலீப் வந்தார். இந்த நேரத்தில் ஆலப்புழா மாவட்ட நீதிபதியும் அவரது மகனும் வந்திருந்தார்.சீருடை அணியாத ஒரு தேவசம் காவலர் திலீப்பை நிர்வாக அலுவலகத்திற்கு அழைத்து சென்றுவிட்டு அங்கிருந்து நேரடியாக தரிசனத்திற்கு அழைத்து சென்றார்.இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க கவனம் செலுத்தப்படும். தேவசம் லஞ்ச ஒழிப்பு துறையும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.