| ADDED : அக் 16, 2025 04:21 AM
காங்கிரஸ் எம்.பி., கார்த்தி வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை டில்லி உயர் நீதிமன்றம் தளர்த் தியது. ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளிலிருந்து அன்னிய முதலீடு பெற்றுக்கொடுத்ததில் முறைகேடு நடந்ததாக, காங்., முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இருவருக்கும் கடும் நிபந்தனைகளுடன் டில்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. குறிப்பாக, 'கார்த்திக் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் விசாரணை நீதிமன்றத்தின் முன்அனுமதி பெற வேண்டும்' என, நிபந்தனை விதிக்கப் பட்டிருந்தது. இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கடந்த செப்., மாதம் விசாரித்த நீதிபதி ரவீந்தர் துவேஜா, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், 'கார்த்தி இனி வெளிநாடுகளுக்கு செல்லும்போது விசாரணை நீதிமன்றத்திடம் அனுமதி பெற தேவையில்லை. அங்கு சென்று என்ன செய்யப் போகிறார் என்பதை மட்டும் இரண்டு வாரங்களுக்கு முன் நீதிமன்றத்திடம் தெரிவித்தால் போதும்' என, தீர்ப்பளிக்கப்பட்டது -டில்லி சிறப்பு நிருபர்- .