| ADDED : ஆக 30, 2024 11:28 AM
புதுடில்லி: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நீதிபதிகளின் கடும் கண்டனத்தை தொடர்ந்து நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்துள்ளார்.டில்லி மதுபான ஊழல் வழக்கில் பாரத் ராஷ்ட்ர சமிதியைச் சேர்ந்த கவிதாவுக்கு ஐந்து மாத சிறைவாசத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ‛‛பா.ஜ.,வுக்கும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கவிதாவுக்கு ஜாமின் கிடைத்தது'' என உச்சநீதிமன்றத்தின் உத்தரவை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்த அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை நீதிபதிகள் கண்டித்தனர்.முழு நம்பிக்கை
இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 30) எக்ஸ் சமூகவலைதளத்தில், ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள பதிவில், '' இந்திய நீதித்துறை மீது எனக்கு மிகுந்த மரியாதையும் முழு நம்பிக்கையும் உள்ளது. நான் நீதித்துறை செயல்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். நீதித்துறை மற்றும் அதன் சுதந்திரத்தின் மீது எனக்கு உயர்ந்த மரியாதையும் உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் நெறிமுறைகள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நீதிபதிகளிடம் எனது நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.