போதை பொருள் கடத்தல் தகவல் கொடுத்தால் பரிசு
சண்டிகர்:“போதைப் பொருள் கடத்தல் மற்றும் வரி ஏய்ப்பு குறித்து தகவல் தருவோருக்கு பரிசு வழங்கப்படும். தகவல் தருவோர் குறித்த விபரம் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். இதற்காக கலால் மற்றும் வரித்துறைக்கு இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்,”என, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி கூறினார்.ஹரியானா மாநில கலால் மற்றும் வரிவிதிப்புத் துறை ஆய்வுக் கூட்டம், முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடந்தது.அப்போது, அதிகாரிகளிடம் சைனி பேசியதாவது:ஹரியானா மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். போதைப்பொருள் கடத்தல் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க பிரத்யேக இணையதளம் உருவாக்க வேண்டும். தகவல் தருவோர் குறித்த விபரத்தை ரகசியமாக வைத்துக் கொள்வதோடு அவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இந்த அதிரடி நடவடிக்கையை கலால், வரி விதிப்புத் துறை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் போலீஸ் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும்.அதேபோல வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத மதுபானம் ஆகியவற்றை தடுக்க கலால் மற்றும் வரிவிதிப்புத் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தகவல் தருவோருக்கு பரிசு வழங்க முதற்கட்டமாக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.