UPDATED : டிச 30, 2025 04:00 AM | ADDED : டிச 30, 2025 03:59 AM
மைசூரு: மைசூரு அருகே நகைக் கடையில் புகுந்த கொள்ளை கும்பல், ஐந்தே நிமிடங்களில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான 7 கிலோ தங்கம், வைர நகைகளை கொள்ளை அடித்து சென்றது. கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், ஹுன்சூர் டவுனில், 'ஸ்கை கோல்டு அண்டு டைமண்டு ஜுவல்லரி' என்ற பெயரில் நகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் 2:03 மணிக்கு இந்த கடைக்குள் நுழைந்த ஐந்து பேர் கும்பல், துப்பாக்கியைக் காட்டி ஊழியர்களை மிரட்டி, கிலோ கணக்கில் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. மொத்தம் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 7 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நகைக் கடையின் மேலாளர் அஸ்கர் புகார் அளித்துள்ளார். கொள்ளையரைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொள்ளை சம்பவம் குறித்த வீடியோ நேற்று வெளியானது. அதில், நேற்று முன்தினம் பிற்பகல் 2:03 மணிக்கு ஒருவர் பின் ஒருவராக, ஐந்து பேர் கடைக்குள் நுழைந்து துப்பாக்கியை காட்டி, ஊழியர்கள், கடையில் இருந்த சில வாடிக்கையாளர்களை மிரட்டி, 'ரேக்'கில் இருந்த நகைகளை எடுத்து பைகளுக்குள் போடுவது பதிவாகி உள்ளது. இதில் மூவர், ஹெல்மெட் அணிந்திருந்தனர். மேலும், சாப்பிட சென்றிருந்த கடையின் மேலாளர் அஸ்கருக்கு தகவல் கிடைக்க, அவர் விரைந்து வந்து கொள்ளையர் தப்பாமல் இருக்க, நுழைவாயில் கதவை வெளிப்பக்கமாக இழுத்து பிடிப்பதும், இதை பார்த்த கொள்ளையரில் ஒருவர் துப்பாக்கியால் கதவில் சுடுவதும் பதிவாகி உள்ளது. தொடர்ந்து, பிற்பகல் 2:08 மணிக்கு வெளியே தயாராக இருந்த பைக்குகளில் ஏறி கொள்ளையர் தப்பிச் செல்வதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.