மும்பை மூதாட்டியிடம் ரூ.14 லட்சம் மோசடி டிஜிட்டல் கைது
மும்பை, மொபைல் போன் வாயிலாக அழைத்து, 'டிஜிட்டல் கைது' செய்வதாக மிரட்டி, மும்பையைச் சேர்ந்த மூதாட்டியிடம், 14 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.வீட்டில் யாரும் இல்லாதபோது அல்லது இருக்கும்போது, கதவை உடைத்து, ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து திருடுவது எல்லாம் தற்போது பழைய கதையாகிவிட்டது.தற்போதைய நவீன தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ப, தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மோசடி செய்வது புதிய ரகமாக இருக்கிறது. இதில், டிஜிட்டல் கைது என்ற மோசடி மிகவும் பரவலாக உள்ளது. வங்கிக் கணக்கு
மொபைல் போனில் ஒருவரை அழைத்து, மோசடி வழக்கு உள்ளதாக மிரட்டுவர். சி.பி.ஐ., அமலாக்கத் துறை, போலீஸ், ரிசர்வ் வங்கி என அரசு அமைப்புகளில் இருந்து அழைப்பதாக இந்த மோசடிக்காரர்கள் கூறுவர்.வீடியோ அழைப்பிலேயே அவர்களை இருக்க வைத்து, தொடர்ந்து மிரட்டுவர். ஒரு கட்டத்தில், தாங்கள் குறிப்பிடும் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினால், வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறுவர்.இந்த முறையை பயன்படுத்தி, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த, 67 வயது மூதாட்டியிடம், 14 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. அவரது மொபைல் போனுக்கு அழைத்த மோசடிக்காரர், டில்லி தொலை தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக கூறினார். அந்த மூதாட்டி மீது பண மோசடி வழக்கு உள்ளதாகவும், மோசடிக்கு அவரது ஆதார் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார். அந்த அழைப்பில் இணைந்த மற்றொருவர், டில்லி சைபர் போலீஸ் அதிகாரி என்று கூறி, அந்த மூதாட்டியிடம் பல கேள்விகளை கேட்டு மிரட்டினார். ஏமாற்றம்
இதற்கிடையே, மற்றொரு பெண் அந்த இணைப்பில் இணைந்து, வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமானால், குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் தன் அனைத்து சேமிப்பையும் செலுத்தும்படி அந்த மூதாட்டியிடம் கூறினார்.சோதனைகளுக்குப் பின், அந்தப் பணம் திருப்பி தரப்படும் என்று அந்த பெண் கூறினார்.மிரண்டு போன அந்த மூதாட்டி, தன் பல்வேறு சேமிப்புகளில் இருந்த பணத்தை எல்லாம், அந்த மோசடி கும்பலைச் சேர்ந்த பெண் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார்.கடந்த செப்., 1 முதல் 5ம் தேதி வரை, இந்த மோசடிக்காரர்களிடம் அந்த மூதாட்டி சிக்கினார். அதன்பின், தன் மகனிடம் மொபைல் போனில் பேசிய போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.இது தொடர்பாக, மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.