உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மது கொள்முதலில் ரூ.2,000 கோடி ஊழல் : மாஜி முதல்வர் மகன் கைது

மது கொள்முதலில் ரூ.2,000 கோடி ஊழல் : மாஜி முதல்வர் மகன் கைது

ராய்பூர் : மதுபான ஊழல் தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யாவை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2018 - 23 வரை பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது, 2019 - 22 காலகட்டத்தில், மதுபான கொள்முதலில் பெரும் அளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் கிடைத்த பல கோடி ரூபாய், பூபேஷ் பாகேல் மகன் சைதன்யாவுக்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு கைமாறியதாக கூறப்பட்டது. கிட்டத்தட்ட 2,100 கோடி ரூபாய்க்கு மதுபான ஊழல் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. வருமான வரித் துறை அளித்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை இந்த ஊழல் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது. அதை உச்ச நீதிமன்றம் ஏற்காத நிலையில், மீண்டும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் உதவியுடன் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தது. அதில், அரசுக்கு எந்தவொரு கலால் வரியையும் செலுத்தாமல் மதுபான உற்பத்தி ஆலையில் இருந்து நேரடியாக அரசு மதுபான கடைகளுக்கு மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டதாகவும், கணக்கில் வராத இந்த விநியோகத்தால், பல கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் அமலாக்கத் துறை கண்டறிந்தது. இதையடுத்து துர்க் மாவட்டத்தின் பிலாய் நகரில் உள்ள சைதன்யாவின் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கிய நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் சைதன்யாவை கைது செய்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது வீட்டின் முன் குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள், பிறந்தநாள் தினத்தில் சைதன்யாவை கைது செய்வதா என கேள்வி எழுப்பி அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. மதுபான ஊழல் தொடர்பாக இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில், முறைகேட்டில் தொடர்புடையவர்களின் 205 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மறக்க மாட்டேன்!'

அதானி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக, ராய்கர் மாவட்டத்தில் உள்ள தம்னார் வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுகின்றன. இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு ஆதரவு தெரிவிக்க பூபேஷ் பாகேல் சமீபத்தில் அங்கு சென்றிருந்தார். சத்தீஸ்கர் சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று இந்த விவகாரத்தை எழுப்ப திட்டமிட்டிருந்தார். ஆனால், நேற்றைய சோதனையால் 'அப்செட்' அடைந்த அவர் கூறியதாவது: அதானியை திருப்திபடுத்தவே மோடியும், அமித் ஷாவும் என் வீட்டிற்கு அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளனர். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். ஒருபுறம் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பீஹாரில் ஏராளமான வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கி வருகிறது. மறுபுறம் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என விசாரணை முகமைகளை தவறாக பயன்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்கப் பார்க்கிறது. ஜனநாயக நாட்டில் இப்படியொரு பிறந்த நாள் பரிசு யாருக்கும் கிடைத்திருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை