மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ரூ.25 லட்சம் பேரம் பேசியதாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்து உள்ளனர்.பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்., 14ம் தேதி அதிகாலை அவர் வீடருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஆயத சப்ளை செய்த மேலும் இரண்டு பேரையும் கைது செய்தனர். அதில் குற்றவாளி ஒருவர், சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.கண்காணிப்பு
நவி மும்பை போலீசார் நீதிமன்றத்தில் 5 பேர் மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறியதாவது: பண்ணை வீட்டில் சல்மான் கானை கொலை செய்வதற்கு ரூ.25 லட்சம் பேரம் பேசப்பட்டு உள்ளது. இந்த பேரத்தை சிறையில் உள்ள ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் பேசி உள்ளான். கொலையில் ஈடுபட புனே, ராய்காட், நவி மும்பை, தானே மற்றும் குஜராத்தில் உள்ள 18 வயதுக்கும் குறைவான சிறார்களை தேர்வு செய்துள்ளனர். பந்த்ரா வீடு, பன்வெல் பண்ணை வீடு, கூர்கான் திரைப்பட நகரில் சல்மான்கானின் நடவடிக்கைகளை 60 முதல் 70 பேர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். 2023 ஆக., முதல் ஏப்.,2024 வரை சல்மான் கானை கொலை செய்வதற்கான அனைத்து திட்டங்களையும் தயாரித்து உள்ளனர்.பாக்., ஆயுதம்
கொலை முயற்சி வழக்கில் கைதான சுக்லா என்பவன் தான், அஜய் கஷ்யாப் உள்ளிட்டு பேரிடம் சல்மான்கானை கொல்வதற்கான பொறுப்பை ஒப்படைத்து உள்ளான். சல்மான் கானுக்கு உள்ள பாதுகாப்பு, குண்டு துளைக்காத வாகனங்கள் காரணமாக கொலை செய்வதற்கு அதிநவீன ஆயுதங்களை வாங்க வேண்டும் என இக்கும்பல் கூறியுள்ளது. இதனையடுத்து, சல்மான் கானை கொலை செய்வதற்காக ஏகே 47, ஏகே 92 மற்றும் பாகிஸ்தானில் இருந்து எம்16 உள்ளிட்ட ஆயுதங்களையும் வாங்கி உள்ளனர். இதற்காக பாகிஸ்தானை சேர்ந்த ஆயுத தரகரையும் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். இதற்காக முதற்கட்டமாக 50 சதவீதம் பணத்தை முன்பணமாகவும் கொடுக்க ஒப்புக்கொண்டனர்.இலங்கைக்கு...
கனடாவில் வசிக்கும் ரவுடி கோல்டி பிரார், சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரன் அன்மோல் பிஷ்னோய் ஆகியோரின் ஒப்புதலுக்காக காத்திருந்தனர். கொலை செய்த பிறகு அவர்கள் அனைவரும் கன்னியாகுமரியில் ஒன்று கூடி இலங்கைக்கு தப்பி செல்லவும் திட்டமிட்டனர். இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.பாதுகாப்பு அதிகரிப்பு
மும்பையில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை போலீசார் அதிகரித்து உள்ளனர்.