செக்யூரிட்டி கொலையில் துப்பு கொடுத்தால் ரூ.25 ஆயிரம் பரிசு
மூணாறு:மூணாறு அருகே செக்யூரிட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பு கொடுத்தால் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். கன்னிமலை எஸ்டேட், பாக்டரி டிவிஷனைச் சேர்ந்த ராஜபாண்டி 68, தனியார் ஏஜென்சி மூலம் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். சொக்கநாடு எஸ்டேட் தேயிலை பாக்டரியில் ஆக.,23ல் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். டி.எஸ்.பி., அலெக்ஸ்பேபி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். இடுக்கியைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடத்தில் சோதனையிட்டும், கொலை நடந்த பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. கொலை நடந்து 13 நாட்கள் ஆகியும் எவ்வித துப்பும் கிடைக்காததால், கொலை தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் எனவும் அவர்களது பெயர் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். மூணாறு டி.எஸ்.பி., 94979 90060, இன்ஸ் பெக்டர் 94979 47169, எஸ்.ஐ., 94979 75363 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.