திரிணமுல் எம்.பி., வங்கி கணக்கில் 56 லட்சம் ரூபாய் அபேஸ்
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜியின் வங்கி கணக்கில் இருந்து போலி ஆவணங்களின் மூலம், 56 லட்சம் ரூபாயை, சைபர் குற்றவாளிகள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., மூத்த தலைவரும், நான்கு முறை லோக்சபா எம்.பி.,யுமான கல்யாண் பானர்ஜிக்கு, எஸ்.பி.ஐ., வங்கியின் கொல்கட்டா உயர் நீதிமன்ற கிளையில் சேமிப்பு கணக்கு உள்ளது. கடந்த 2001- - 06 காலகட்டத்தில் கல்யாண் பானர்ஜி, எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, அந்த வங்கி கணக்கு துவங்கப்பட்டது. எனினும், இது பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில், இந்த வங்கிக் கணக்கில் இருந்த 56 லட்சம் ரூபாயை, சைபர் குற்றவாளிகள் கொள்ளையடித்ததாக எஸ்.பி.ஐ., நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. இதன்படி வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், போலி பான் மற்றும் ஆதார் அட்டைகளை பயன்படுத்தி, கல்யாண் பானர்ஜியின் வங்கி கணக்கில் இருந்த, 'மொபைல் போன்' எண் உள்ளிட்ட விபரங்களை சைபர் குற்றவாளிகள் கடந்த அக்டோபர் 28ம் தேதி புதுப்பித்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த வங்கி கணக்கில் இருந்த 56.39 லட்சம் ரூபாயை, இணைய வங்கி பரிவர்த்தனைகள் மூலம் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியதுடன், நகை வாங்குதல், ஏ.டி.எம்., மூலம் பணம் எடுத்தல் போன்ற நடவடிக்கைகளிலும் சைபர் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத கணக்கை, போலி ஆவணங்கள் வாயிலாக சைபர் குற்றவாளிகள் மோசடிக்கு பயன்படுத்தியது குறித்தும், வங்கி ஊழியர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.