ஜனாதிபதிக்கு ரூபகலா கடிதம்
தங்கவயல் ; தங்கவயல் பெமல் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அவர்களின் பிரச்னையை தீர்க்க தலையிட கோரி ஜனாதிபதிக்கு தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மத்திய அரசுக்கு சொந்தமான தங்க சுரங்க நிறுவனத்தை மூடுவதற்கு முன் வந்த போது பெமல் தொழிற்சாலையை ஏற்படுத்தினர். அதில் வேலை வாய்ப்பையும் உறுதி செய்தனர்.அப்போதைய நிலையில் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் ஒரே நிறுவனமாக பெமல் தொழிற்சாலை மட்டுமே இருந்தது.தற்போது 4,000 பேர் பெமலில் பணியாற்றுகின்றனர். நீண்ட நாட்களாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.இந்நிலையில் ஊதிய உயர்வு, தகுதி வாய்ந்த, படித்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி வழங்குதல், ஓய்வுக்கு பின் சலுகைகள் வழங்குதல் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, குறிப்பிட்டுள்ளார்.