உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்ட டில்லியில் சனாதனி கிரிக்கெட் லீக்

வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்ட டில்லியில் சனாதனி கிரிக்கெட் லீக்

புதுடில்லி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடமாநில மக்களுக்கு நிவாரண உதவி திரட்டும் நோக்கில், ஆன்மிக தலைவர்கள் பங்கேற்கும், 'சனாதனி கிரிக்கெட் லீக்' வரும், 18ம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில், கிரிக்கெட் விளையாட்டுக்கு என பிரத்யேக ரசிகர் கூட்டம் உள்ளது. இப்போட்டிகளை காண திருவிழா போல், ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வருவர். இதைக் கருதி, சனாதன நியாஸ் அறக்கட்டளையின் கீழ் ஆன்மிக தலைவர்கள் பங்கேற்கும் சனாதனி கிரிக்கெட் லீக் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இப்போட்டியின் வாயிலாக கிடைக்கும் தொகையை, சமீபத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவியாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கலாசார வேர்

இதுகுறித்து சனாதன நியாஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் டில்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஆன்மிக தலைவர்களும், சொற்பொழிவாளர்களுமான தேவ்கினந்தன் தாக்கூர், பாகேஷ்வர் தாமின் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, இந்திரேஷ் உபாத்யாய், சின்மயானந்த் ஆகியோர் தலைமையில், 'பிருந்தாவன் வாரியர்ஸ், பஜ்ரங் பிளாஸ்டர்ஸ், ராதே ராயல்ஸ், ராகவா ரைடர்ஸ்' ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. டில்லி பாஹர்கஞ்ச் பகுதியில் உள்ள மைதானத்தில், வரும் 18ம் தேதி காலை 9:30 மணிக்கு இப்போட்டி நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு அணியும் சனாதன தர்மத்தின் பக்தி மற்றும் கலாசார வேர்களால் ஈர்க்கப்பட்டு, அணியின் பெயர்களை வைத்துள்ளன. உன்னதமான நோக்கத்துக்காக நடத்தப்பட உள்ள இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் அனைத்து தொகையும் வெள்ள நிவாரண பணிக்கு செல்லும். இந்த போட்டியின் வாயிலாக ஆன்மிக தலைவர்களின் பணி, கோவில் மற்றும் சொற்பொழிவுடன் நின்றுவிடவில்லை என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க உதவும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எதிர்பார்ப்பு

கிரிக்கெட் போட்டிகளில் தங்களுக்கு பிடித்த நட்சத்திர வீரர்கள் களமிறங்குவதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் வருவதுபோல், தங்கள் ஆன்மிக குருமார்கள் கிரிக்கெட் விளையாடுவதை காண பக்தர்கள் அதிகளவு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் ஆன்மிக தலைவர்களுக்கு, உலகம் முழுதும் பக்தர்கள் இருப்பதால், சமூக வலைதளங்களில் இப்போட்டியை நேரலை செய்யவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 15, 2025 10:32

இவங்க முகரைகளை பாத்தா நிதி திரட்ட வந்தாமாதிரி தெரீலே சுருட்டிக்கிட்டு ஓட வந்த மாதிரி இருக்கு