உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சன்சாத் கேல் மஹோத்சவ் விழா நிறைவு: கோவை மாணவி நேசிகாவுடன் உரையாடிய பிரதமர் மோடி

சன்சாத் கேல் மஹோத்சவ் விழா நிறைவு: கோவை மாணவி நேசிகாவுடன் உரையாடிய பிரதமர் மோடி

-நமது நிருபர்-

சன்சாத் கேல் மஹோத்சவ்' விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா இன்று நடந்தது. நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடந்த இந்த விழாவில், டில்லியில் இருந்தபடி காணொலி காட்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில், ''பெற்றோர், தங்கள் குழந்தைகளை விளையாட ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டு என்பது கற்றலின் ஒரு பகுதி மட்டுமல்ல; உடல், மன ஆரோக்கியத்துக்கும் விளையாட்டு முக்கியம். விளையாட்டு வீரர்கள் தங்களது வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டின் வெற்றிக்காவும் விளையாடுகின்றனர்,'' என்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விழாவில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார்.

கோவை மாணவி அசத்தல்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவையை சேர்ந்த கபடி வீராங்கனை நேசிகா, பிரதமர் மோடியுடன் உரையாடினார்.

நன்றி

''எனது விளையாட்டுப் பயிற்சியால் கல்வி எதுவும் பாதிக்கப்படவில்லை. பள்ளி வேலை நேரத்துக்கு பிறகு ஒரு மணி நேரம் பயிற்சி மேற்கொள்கிறேன். எனது மாநில விளையாட்டு என்பதால் கபடியை தேர்வு செய்வேன். எங்கள் ஊரில் இந்த விழாவை ஏற்பாடு செய்தமைக்கு மிகவும் நன்றி,'' என்றார்.

யார் இந்த நேசிகா?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பு எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி நேசிகா. இவர், தேசிய அளவில் சைக்கிளிங் மற்றும் மாநில அளவில் கபடி போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்தவர். இவர் தான் இன்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் உரையாடினார்.அவரிடம் பிரதமர் மோடி, 'நீங்கள் பங்கேற்கும் 2 விளையாட்டுகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது எது என்று கேட்டார். அதற்கு நேசிகா, 'மாநில விளையாட்டு என்பதால் கபடியை தான் அதிகம் பிடிக்கும்' என்றார்.சன்சாத் கேல் மஹோத்சவ் பற்றி உங்கள் கருத்து என்று மாணவியிடம் மோடி கேட்டார். அதற்கு நேசிகா, ''இது போன்ற விளையாட்டுகள், எங்களைப்போன்ற மாணவ, மாணவியருக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளன,'' என்றார்.

முக்கியம்

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: பெற்றோர்கள் குழந்தைகளை விளையாட ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டு என்பது கற்றலின் ஒரு பகுதி மட்டுமல்ல; உடல் மன ஆரோக்கியத்துக்கும் விளையாட்டு முக்கியம். விளையாட்டு வீரர்கள் தங்களது வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டின் வெற்றிக்காவும் விளையாடுகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மகிழ்ச்சி

மேட்டுப்பாளையத்தில் நடந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: 240 பார்லிமென்ட் தொகுதிகளில் இப்போட்டி நடந்தது. தமிழகத்தில் என் தொகுதியில் நடந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. 2047ம் ஆண்டு, 100 வது சுதந்திர தினம் கொண்டாடும் போது, நம் நாடு வல்லரசாக இருக்கும். 2011ம் ஆண்டு 11வது பொருளாதார நாடாக நம் நாடு இருந்தது. இன்றைக்கு 4வது நாடாக உள்ளது. புதிய இளைஞர்களை கொண்ட நாடாக நம் நாடு உள்ளது. 2030ல் காமன் வெல்த் விளையாட்டு ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் நம் பகுதியில் இருந்து விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும். அதே போல் ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும்,' என்றார்.

தன்னம்பிக்கை

விழாவில் பி.டி. உஷா பேசியதாவது: பதக்கம் வெல்வது மகிழ்ச்சியானது தான்; ஆனால் நீங்கள் வெளிப்படுத்திய உறுதி, கடைப்பிடித்த ஒழுக்கம் மற்றும் கொண்டிருந்த தன்னம்பிக்கைதான் உண்மையான வெற்றி. நாட்டின் இளைஞர்களை வலுப்படுத்தும் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மத்திய இணை அமைச்சர் முருகனுக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிந்தும் ஒவ்வொரு வியர்வைத் துளியும், ஒவ்வொரு அதிகாலை பயிற்சியும், உங்கள் உள்ளார்ந்த வலிமையை கட்டியெழுப்புகிறது.

மீண்டும்...மீண்டும்!

இன்று சிலர் கழுத்தில் பதக்கங்களுடன் இங்கிருந்து செல்லப் போகிறீர்கள். அவற்றை மதியுங்கள்; ஆனால் அவை இலக்குகள் அல்ல, அடையாளங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பதக்கம் பெறாமல் பலரும் இருக்கலாம். அதனால் உங்கள் திறமை மதிப்பிடப்படாது என எண்ண வேண்டாம்.ஒவ்வொரு தோல்விக்கு பிறகும் மீண்டும் முயற்சிக்கவும், மீண்டும் போராடவும், மீண்டும் கனவு காணவும் உங்களை ஊக்குவிக்கும். இந்தியா பொருளாதாரத்தில் மட்டுமல்ல, விளையாட்டிலும், தன்னம்பிக்கையிலும், கனவுகளிலும் உயர்ந்து வருகிறது.

முன்னேறுங்கள்

உலகமே நம்மை கவனித்து வருகிறது. உலக மேடையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தப் போகும் பல நட்சத்திரங்கள் இன்று இங்கே அமர்ந்திருக்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆகவே தைரியமாக கனவு காணுங்கள், ஆர்வத்துடன் பயிற்சி செய்யுங்கள், பணிவுடன் முன்னேறுங்கள். குறிப்பாக, அனைத்தும் சாத்தியமற்றதாக தோன்றும் நாட்களிலும் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருங்கள். கைவிட மறுப்பவர்களுக்கே எதிர்காலம் சொந்தம். இவ்வாறு அவர் பேசினார்.

முயற்சி

விழாவில் ஜி.வி. பிரகாஷ்குமார் பேசுகையில், ' இந்தியா உலகளவில் பிற நாடுகளுக்கு போட்டி நாடாக விளங்கி வருகிறது. அதற்காக மத்திய அரசு நிறைய முயற்சி எடுத்து வருகிறது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை