உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் பிரசாரத்தை தடுக்க திட்டம்

தேர்தல் பிரசாரத்தை தடுக்க திட்டம்

புதுடில்லி:“லோக்சபா தேர்தலில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்வதைத் தடுக்கவே, அமலாக்கத் துறை வாயிலாக அவரை கைது செய்ய பா.ஜ., திட்டமிடுகிறது, ”என, டில்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான கோபால் ராய் கூறினார்.டில்லி அரசின் 2021 - 2022 ஆண்டுக்கான மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு டில்லி கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார்.இதையடுத்து, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. அதேநேரத்தில் அமலாக்கத் துறையும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில், டில்லி துணை முதல்வராக பதவி வகித்த மணீஷ் சிசோடியா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை இதுவரை மூன்று முறை சம்மன் அனுப்பியது. கடந்த ஆண்டு நவ. 2, டிச. 21 மற்றும் கடந்த 3ம் தேதி என மூன்று முறை அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்களை கெஜ்ரிவால் நிராகரித்தார்.இந்நிலையில், வரும் 18ம் தேதி ஆஜராகுமாறு நான்காவது முறையாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.இதுகுறித்து, டில்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான கோபால் ராய் கூறியதாவது:முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 18ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கோவா மாநிலத்தின் சுற்றுப் பயணம் செய்கிறார். அதேநேரத்தில், அமலாக்கத் துறை அனுப்பியுள்ள சம்மன் குறித்து சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பா.ஜ., அரசியல் ஆயுதமாக செயல்படுவதை அமலாக்கத் துறை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.லோக்சபா தேர்தலில் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கவே பா.ஜ., அறிவுறுத்தல்படி அமலாக்கத் துறை 'சட்டவிரோத சம்மன்' அனுப்பியுள்ளது. அமலாக்கத் துறை என்பது மத்திய அரசின் விசாரணை அமைப்பு. ஆனால், சம்மன் அனுப்பியது குறித்த தகவல் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு வந்தடையும் முன்பே, ஊடகங்களில் வெளியாவது மர்மமாக உள்ளது. கெஜ்ரிவாலின் சுற்றுப்பயண தேதி அறிவிக்கப்பட்டவுடன், அமலாக்கத் துறை சம்மன் அனுப்புவதும் வினோதமாக இருக்கிறது. லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்கவே பா.ஜ., திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

2 நாள் பயணம்

ஆம் ஆத்மி கட்சியின் கோவா மாநில தலைவர் அமித் பலேகர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 19ம் தேதி பனாஜி வருகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் 19 மற்றும் 20 ஆகிய இரு நாட்களும் லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.நாற்பது எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட கோவா சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சிக்கு இருவர் உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய ஆம் ஆத்மி, 2022ல் நடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளைக் கைப்பற்றியது. வரும் லோக்சபா தேர்தலிலும் ஆம் ஆத்மி போட்டியிடும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி