| ADDED : பிப் 11, 2025 11:54 PM
மும்பை:சந்தையின் இயல்புக்கு மாறாக, முறைகேடாக வர்த்தகம் நடைபெறுவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், குஜராத்தைச் சேர்ந்த எல்.எஸ்., இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்துக்கு சந்தை கட்டுப்பாட்டாளரான 'செபி' தடை விதித்து உள்ளது.கடந்தாண்டு ஜூலை 23ல் ஐவுளி நிறுவனமான எல்.எஸ்., இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 22.50 ரூபாயாக இருந்த நிலையில், வெறும் இரண்டே மாதத்தில், அதாவது கடந்த செப்டம்பர் 27ல் 1,089 சதவீதம் உயர்வு கண்டு, பங்கு விலை 267.50 ரூபாயாக உயர்ந்து உள்ளது. அதற்கு பின்னர், பங்கு விலை 84.15 சதவீதம் சரிவைக் கண்டு நவ.21ல் 42.39 ரூபாயாக குறைந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் டிசம்பர் 23ம் தேதி, பங்குகள் 223 சதவீதம் உயர்வு கண்டு, 136.87 ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கடந்த நிதியாண்டின் இரு காலாண்டுகளில் இதன் வருமானம் பூஜ்ஜியம்! இதுபோன்ற மோசமான நிதிநிலை கொண்ட இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, செப்டம்பர் 27ல் 22,700 கோடி ரூபாயாக உச்சத்தை தொட்டதையடுத்து, கண்காணிப்பு வளையத்திற்குள் வந்தது. தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.