| ADDED : ஜன 22, 2024 06:05 AM
மாண்டியா: ''ராமர் கோவில் திறக்கப்படுவது, எங்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்களும் ராம பக்தர்கள் தான்,'' என விவசாயத்துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்தார்.மாண்டியாவில் நேற்று அவர் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே, அயோத்தி ராமர் கோவிலை திறந்து வைக்கிறார். தன் அமைச்சரவை உறுப்பினர்களையே அழைக்கவில்லை. பேனர்களில் ராமனை விட, பிரதமர் மோடியின் போட்டோ பெரிதாக உள்ளது. ராமர் கோவிலுக்காக போராடிய அத்வானியையே வராதீர்கள் என, கூறியுள்ளனர்.அரைகுறையாக உள்ள ராமர் கோவிலை திறந்து வைக்க, மடங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டியது, எங்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்களும் ராம பக்தர்கள்தான். ஆனால் தேர்தலுக்காக, திறப்பு விழா நடத்துவது சரியல்ல. கோவில் மற்றும் கடவுளை முன் வைத்து, தேர்தலை சந்திக்க முற்பட்டுள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு, முதல்வர் சித்தராமையாவை அழைக்கவில்லை. இது, கன்னடர்களுக்கு செய்த அவமதிப்பாகும்.எம்.பி., சுமலதா அம்பரிஷை, காங்கிரசில் சேர்ப்பது குறித்து, ஆலோசிக்கவில்லை. எனக்கும், மற்றவருக்கும் வித்தியாசம் உள்ளது. ஆலோசிக்கப்படாத விஷயத்தை பற்றி, நான் பேசவில்லை. சுமலதாவை காங்கிரசில் சேர்க்க, துணை முதல்வர் சிவகுமார் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, எனக்கு தெரியாது.இவ்வாறு அவர் கூறினார்.