உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் அச்சுதானந்தன் காலமானார்

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் அச்சுதானந்தன் காலமானார்

திருவனந்தபுரம்,: கேரளாவின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன், உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 101. வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அச்சுதானந்தனுக்கு கடந்த மாதம் 23ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, மருத்துவ மனையிலேயே நேற்று அவர் உயிர் பிரிந்தது. அச்சுதானந்தன் காலமான செய்தி அறிந்து முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூ., பொதுச் செயலர் கோவிந்தன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், அச்சுதானந்தனின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினர். அச்சுதானந்தனின் மறைவு கேரள அரசியல் தலைவர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், முக்கிய தலைவர்கள் பலர் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெருந்தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். வாழ்நாள் முழுதும் பின்தங்கிய வகுப்பினரின் உரிமைகளுக்காக பாடுபட்ட அச்சுதானந்தன், கேரள அரசியலில் பெரும் ஆளுமையாக திகழ்ந்தவர். 2019ல் பக்கவாதம் ஏற்பட்டதால் பொது வாழ்வில் இருந்து விலகினார். 2021ல் கட்சியின் நிர்வாக சீர்திருத்த கமிட்டி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். கேரளாவில் 2001-2006 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசில் ஏ.கே.அந்தோணி முதல்வராக இருந்தபோது, அச்சுதானந்தன் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். கடந்த, 2006ல் நடந்த கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, ஆட்சியில் அமர முக்கிய பங்காற்றினார். அப்போது முதல் 2011 வரை கேரள முதல்வராக அச்சுதானந்தன் பதவி வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை