ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர் திடீர் ராஜினாமா
புதுடில்லி,டில்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர் ராஜினாமா செய்தது, அந்த கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் 5ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது; 8ல் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இத்தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி - பா.ஜ., - காங்., இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்காத ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர், நேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். ஆம் ஆத்மியைச் சேர்ந்த மதன் லால், பாவ்னா கவுர், நரேஷ் யாதவ், ரோஹித் மெஹ்ரவுலியா, பவன் சர்மா, பி.எஸ்.ஜூன், ராஜேஷ் ரிஷி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பாக சட்டசபை சபாநாயகர் நிவாஸ் கோயலுக்கு அவர்கள் கடிதம் எழுதி உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது, ஆம் ஆத்மிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.