உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோலார் மாவட்ட ஏரிகளில் கழிவுநீர் வெளிநாட்டு பறவைகளின் வலசை சரிவு

கோலார் மாவட்ட ஏரிகளில் கழிவுநீர் வெளிநாட்டு பறவைகளின் வலசை சரிவு

கோலார்: கோலார் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருந்தும், இங்கு வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருவது குறைந்து வருகிறது.பறவைகள் பல்வேறு நகரங்களை விட்டு, கோலார் மாவட்டத்திற்கு வலசை வருவது வழக்கம். தொடர் வறட்சியிலும் கூட நுாற்றுக்கணக்கான பறவைகள், வனவிலங்குகளின் புகலிடமாக கோலார் மாவட்டம் இருந்தது.கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏரிகளில் தண்ணீர் இருந்தும், வெளிநாட்டுப் பறவைகள் வருகை குறைந்தது. இதனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இந்த ஏரிகளின் நீர் அசுத்தமடைந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் இருந்து, இம்மாவட்டத்துக்கு இனவிருத்திக்காக வர வேண்டிய ஆயிரக்கணக்கான பறவை இனங்கள், சில ஆண்டுகளாக வருவதில்லை. உள்ளூர் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

சரணாலயம்

கோலார் மாவட்டம் 200க்கும் மேற்பட்ட பறவை இனங்களின் சரணாலயமாக விளங்குகிறது. அதிக வனப்பகுதி இருப்பதால், பறவைகளுக்கு ஏற்ற வாழ்விடமாக திகழ்ந்தது.சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர், ஏரிகளில் விடப்படுவதால் தான், அதனுள் இருந்த மரங்கள் காய்ந்துவிட்டன.அந்த நீரை பருகும் பறவைகள் வெளியேறுகின்றன. இதனால், வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.கோலார் மாவட்டத்தில் பிளமிங்கோ, ஸ்பூன்பில், செம்பருத்தி, கருப்பு செம்பருத்தி, ஸ்டார்க், பீ ஈட்டர், காப்பர் ஸ்மித் பார்பெட் உள்ளிட்ட பறவைகள் வந்தே சில ஆண்டுகள் ஆகின்றன. லீப்லெட் பேட், இந்தியன் ரோலர், மவுண்டிங் ஹாக் ஈகிள், கெஸ்ட்ரல், ட்ரீ பை, கிங்பிஷர், ட்ராங்கோ, கார்மோரன்ட், ரிவர்டன், புல்புல் உள்ளிட்டவை உள்நாட்டில் அதிகம்.மிகவும் ஆபத்தான பறவைகளில் ஒன்றான யெல்லோத்ரோட் புல்புல், பெரும்பாலும் இமயமலையின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இந்த பறவை கோலார் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டது.

அசத்தல் நடனம்

சிட்டுக்குருவி போன்று தோற்றமளிக்கும் பிரவுன்ஷிர்க்கை, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணலாம். இந்தப் பறவையின் நடனம் பார்ப்பதற்கு அசத்தலாக இருக்கும்.அதிகப்படியான நகரமயமாக்கல் மற்றும் மொபைல் டவர்களால், சிட்டுக்குருவிகள், கிளிகள், சூரிய பறவைகள், மரங்கொத்திகள், காக்கைகள், புறாக்கள் போன்ற உள்ளூர் பறவைகளின் எண்ணிக்கை நகரங்களில் மறைந்து வருகிறது.வனப்பகுதியிலும் பறவைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரே அளவில் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

வவ்வால்கள்

முல்பாகல் தாலுகாவின் ஹனுமனஹள்ளியில் மிகவும் அரிதான வவ்வால்கள் காணப்படுகின்றன. இப்பகுதியை வவ்வால்கள் பாதுகாக்கும் பகுதியாக வனத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து வனவிலங்கு பாதுகாப்பு தன்னார்வலர் புனித் கூறுகையில், ''கோலார் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பறவை இனங்களை காப்பாற்ற, புலம்பெயர் பறவைகளை கவர நடவடிக்கை தேவை.பொதுமக்களும் அரசுடன் இணைந்து பறவைகளுக்கு பழம் தரும் செடிகளை வளர்க்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை