| ADDED : நவ 24, 2025 01:31 PM
பெங்களூரு: பெங்களூருவில் பணி ஓய்வு நேரத்தில் ஹோட்டலில் தங்கி இருந்த போது 60 வயதான சக விமானி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 26 வயதான பெண் துணை விமானி புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட்டை விமான நிலையத்தில் இருந்து புட்டபர்த்தி வழியாக பெங்களூருவுக்கு சென்ற விமானத்தை ஒரு துணை பெண் விமானி மற்றும் இரண்டு ஆண் விமானிகள் இயக்கி உள்ளனர். மறுநாள் மற்றொரு விமானத்தை இயக்க திட்டமிடப்பட்டிருந்ததால், மூவரும் இரவும் ஒரே ஹோட்டலில் தங்கி உள்ளனர். 60 வயதான, சக ஆண் விமானி ரோஹித் ஷரன் சக பெண் விமானியை வெளியே செல்வதற்கு அழைத்துள்ளார். இதற்காக வந்த பெண் துணை விமானியை, ஹோட்டல் அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.பின்னர் அந்த பெண் அந்த குழுவினருடன் மீண்டும் விமானத்தை இயக்கி, ஐதராபாத் வந்தடைந்தார். நடந்த சம்பவம் குறித்து பேகம்பேட்டை (ஐதராபாத்) போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட விமானி மீது வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் பெங்களூருவில் நடந்ததால், அங்குள்ள ஹலாசுரு போலீஸ் ஸ்டேஷனுக்கு வழக்கை மாற்றினர். அதன்படி பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண் விமானி ஒருவர் சக பெண் விமானியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.