முன்ஜாமினுக்கு முதலில் நாட வேண்டியது உயர் நீதிமன்றமா, செஷன்ஸ் நீதிமன்றமா? சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
புதுடில்லி :'முன்ஜாமின் பெற நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடலாமா அல்லது முதலில் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்பதை கட்டாயமாக்குவதா? என்பது குறித்து ஆராய்ந்து முடிவு செய்யப்படும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தள்ளுபடி கேரள உயர் நீதி மன்றத்தில் முன்ஜாமின் கோரி இரண்டு பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். செஷன்ஸ் நீதிமன்றத்தை முதலில் அணுகாமல், நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியதால், இருவரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து, இரண்டு பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், 'கேரளாவில், முன்ஜாமின் கோரும் மனுக்கள் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் நேரடியாக உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. 'அவற்றை உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொள்வது வழக்கமான நடைமுறையாக தெரிகிறது. ஏன் அப்படி நடக்கிறது?' என, கேள்வி எழுப்பினர். 'பி.என்.எஸ்.எஸ்., எனப்படும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் 482வது பிரிவு கைது நடவடிக்கைக்கு ஆளாகும் நபருக்கு, முன்ஜாமின் வழங்க வகை செய்கிறது' என, மனுதாரார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்ஜாமின் இதை குறித்துக்கொண்ட நீதிபதிகள், 'கேரளாவை தவிர, பிற மாநிலங்களில் இப்படி நடப்பதில்லை. கேரள உயர் நீதிமன்றத்தில் மட்டுமே, முன்ஜாமின் கோரும் மனுக்கள் நேரடியாக ஏற்கப்படுவது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது' என்றனர். மேலும், 'முன்ஜாமின் கோரி, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நேரடியாக உயர் நீதிமன்றத்தை அணுகலாமா, அந்த வாய்ப்பு தொடர்ந்து நடைமுறையில் இருக்கலாமா அல்லது முதலில் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகியே நிவாரணம் பெற முடியும் என்பதை கட்டாயமாக்கலாமா? என்பது குறித்து ஆராய்ந்து முடிவு செய்ய விரும்புகிறோம். 'எனவே, இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்திற்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிடுகிறோம்' என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இவ்வழக்கின் அடுத்த விசாரணையை, வரும் அக்., 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.