புதுடில்லி: ''லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தான் கனடாவில் குற்றச்செயலில் ஈடுபடுவதாக கனடா போலீசார் கூறுகின்றனர். இதற்காக இந்தியா மீது குற்றம் சாட்டப்படுகிறது. இருப்பினும், அந்த கும்பலை நாடு கடத்துவதில் கனடா தயக்கம் காட்டி வருகிறது,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், இந்திய தூதரக அதிகாரி மீது கனடா மோசமான புகாரை தெரிவித்தது. இதனால், அதிருப்தி அடைந்த இந்தியா, அந்நாட்டிற்கான தூதரை திரும்ப பெற்றுக் கொண்டதுடன், டில்லியில் பணியாற்றிய கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேறும்படி உத்தரவிட்டு உள்ளது. இது இரு நாட்டு உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. ஆதாரம் இல்லை
இந்நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த பேட்டி ஒன்றில், நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவாளிகளின் தொடர்பு குறித்து உளவுத் தகவலின் அடிப்படையில் தான் குற்றச்சாட்டை முன்வைத்தேன். இதனை நிரூபிக்க வலுவான ஆதாரம் இல்லை. விசாரணைக்கு இந்தியா சிறிதும் ஒத்துழைக்கவில்லை எனக்கூறியிருந்தார்.கனடா அரசே காரணம்
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலையை தெளிவாக கூறியுள்ளோம். 2023 செப்., முதல் இந்த விவகாரத்தில் கனடா உறுதியான ஆதாரத்தை தரவில்லை. அரசியல் நோக்கத்திற்காக இந்த குற்றச்சாட்டை அந்நாடு கூறுகிறது. இந்தியாவை கொச்சைப்படுத்தும் அந்நாட்டின் செயலுக்கான காரணம் அனைவருக்கும் தெரிந்தது. கனடா உடனான உறவு, மக்கள் இடையேயான தொடர்பை நாங்கள் மதித்து வருகிறோம். ஆனால், தற்போதைய சூழ்நிலைக்கு ட்ரூடோ அரசே காரணம். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர்களை நாடு கடத்த கனடா மறுத்து வருகிறது. இந்த கும்பல் தான், கனடாவில் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக கனடா போலீசார் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், இந்தியா மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதுவரை இக்கும்பலை சேர்ந்த 26 பேரை நாடு கடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.ஆனால், இவை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இன்னும் பல கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.இந்திய அதிகாரி அல்ல
காலிஸ்தான் பபயங்கரவாத அமைப்பை சேர்ந்த குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவனை கொலை செய்ய நடந்த சதி தொடர்பாக இந்திய உளவுத்துறையை சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளதாக, அமெரிக்க நீதித்துறை தெரிவித்து உள்ளது. அதேநேரத்தில், இவர் இந்திய அரசுக்காக பணியாற்றவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளது.இதனை, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மில்லர் உறுதி செய்துள்ளார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் தனித்தனியேயும், ஒருங்கிணைந்தும் விசாரணை நடத்தியது எனவும் தெரிவித்துள்ளார்.