எஸ்.ஐ.ஆர்., நடவடிக்கை எதிரொலி வங்கதேசம் திரும்புவோர் அதிகரிப்பு
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் துவங்கியுள்ளதை அடுத்து, சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் எல்லை தாண்டி சொந்த நாட்டுக்கு செல்வது அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதையொட்டி, எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி துவங்கியுள்ளது. இதையடுத்து, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதியில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் சொந்த நாட்டுக்கு எல்லை தாண்டி செல்கின்றனர். இதுகுறித்து நம் எல்லை பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவி, மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதியில் தங்கியுள்ளவர்கள் சொந்த நாடு திரும்புகின்றனர். கடந்த இரண்டு ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது எல்லை தாண்டும் வங்கதேசத் தினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் வேலி அமைக்கப்படாத வடக்கு 24 பர்கனாஸ் மற்றும் மால்டா மாவட்ட எல்லை வழியே வங்கதேசத்துக்கு தப்பி செல்ல முயல்கின்றனர். முன்பு இவ்வாறு செல்வோர் எண்ணிக்கை தினமும் இரு இலக்கமாக இருந்த நிலையில் தற்போது தினமும், 150 பேர் வரை எல்லை தாண்டுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.