தென்னிந்திய நாணயவியல் மாநாடு நிறைவு: தினமலர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு புகழாரம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: 'தினமலர்' நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், தென்னிந்திய நாணயவியல் கழக முன்னாள் தலைவருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி நினைவு சொற்பொழிவு பெங்களூரில் நேற்று நடந்தது.பெங்களூரின் நிருபதுங்கா சாலையில் உள்ள தி மைதிக் சொசைட்டி, சென்னையில் உள்ள தென்னிந்திய நாணயவியல் கழகம் இணைந்து நடத்திய, 33வது ஆண்டு தென்னிந்திய நாணயவியல் தேசிய மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.படத்துக்கு மரியாதை
நிகழ்ச்சி துவங்கியதும், 'தினமலர்' நாளிதழ் முன்னாள் ஆசிரியரும், தென்னிந்திய நாணயவியல் கழக முன்னாள் தலைவருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் படத்திற்கு தென்னிந்திய நாணயவியல் கழக தலைவர் டாக்டர் டி.ராஜா ரெட்டி, செயலர் டாக்டர் டி.சத்யமூர்த்தி, தி மைதிக் சொசைட்டியின் ஆராய்ச்சி மற்றும் அகாடமி இயக்குநர் பேராசிரியர் சீனிவாஸ் வி.படிகர்.தென்னிந்திய நாணய ஆராய்ச்சி ஆய்வு புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் பி.வி.ராதாகிருஷ்ணன், தென்னிந்திய நாணயவியல் கழக பொருளாளர் கலா ஆகியோர் மலர் துாவி மரியாதை செய்தனர்.தொடர்ந்து, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி நினைவு சொற்பொழிவில், டாக்டர் பி.வி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:கல்வெட்டு சரிதை, தொல்பொருள் ஆய்வு, நாணயவியல் பற்றி தமிழ், ஆங்கிலத்தில் எண்ணற்ற கட்டுரைகளை எழுதி, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பெருமை சேர்த்தார். 1976ம் ஆண்டு தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை தினமலர் நாளிதழில் அமல்படுத்தினார்.பழங்கால எழுத்து முறையான பிராமி மீது அதிக ஆர்வம் கொண்டவர். தென்னிந்திய நாணயவியல் கழக தலைவராக சிறப்பாக பணி செய்தார். ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுக்காக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல விருதுகள் பெற்றவர்.தொல்காப்பியர் விருது
கடந்த 2015ல், அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து, 'தொல்காப்பியர் விருது' பெற்றார். இந்த நேரத்தில் அவரது துணைவியார் ராஜலட்சுமி கிருஷ்ணமூர்த்திக்கும், இரா.கிருஷ்ணமூர்த்தி நினைவாக அறக்கட்டளை நிறுவிய அவர் குடும்பத்தினருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.'உருவ படங்கள், புராண கதைகள், இந்திய நாணயங்கள் பற்றிய சில சிந்தனைகள்' என்ற தலைப்பில், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி நினைவு சொற்பொழிவை, தி மைதிக் சொசைட்டியின் ஆராய்ச்சி மற்றும் அகாடமி இயக்குநர் பேராசிரியர் சீனிவாஸ் வி.படிகர் நிகழ்த்தினார். தொடர்ந்து, 17 ஆய்வாளர்களின் நாணயம் பற்றிய ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.நேற்று மதியம் நடந்த நிகழ்ச்சியில், பெங்களூரு மண்டல தொல்பொருள் ஆய்வு மையத்தின் கண்காணிப்பாளர் பிபின் சந்திரா நெகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பிபின் சந்திரா நெகி பேசுகையில், ''தி மைதிக் சொசைட்டி, தலைவர் நாகராஜ் தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது. தி மைதிக் சொசைட்டி, தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் முக்கிய நோக்கம், நாணயங்கள் பற்றி ஆராய்கிறது. ''இந்த சொசைட்டியை மேலும் முன்னெடுத்து செல்வார் என்று நம்பிக்கை உள்ளது. தொல்பொருள் துறையில் நான் பணியாற்றினாலும், நாணயவியல் மீதும் எனக்கு ஆர்வம் உண்டு,'' என்றார்.டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் முதல் நினைவு சொற்பொழிவு ஹைதராபாதில் நடந்தது குறிப்பிடத்தக்கது.