உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகா கோவில்களில் இன்று சிறப்பு பூஜை தங்கவயல், மைசூரில் பல லட்சம் லட்டுகள் வழங்க முடிவு

கர்நாடகா கோவில்களில் இன்று சிறப்பு பூஜை தங்கவயல், மைசூரில் பல லட்சம் லட்டுகள் வழங்க முடிவு

பெங்களூரு: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதை ஒட்டி, பெங்களூரில் காணும் இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கர்நாடகாவின் அனைத்து கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடப்பதை ஒட்டி, நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எங்கு பார்த்தாலும் காவி மயமாகவே காட்சி அளிக்கிறது. கர்நாடகாவிலும் அதே போன்று காட்சி அளிக்கிறது.

தோரணங்கள்

இந்த வகையில் பெங்களூரே விழா கோலம் பூண்டுள்ளது. குறுக்கு சாலை முதல், நெடுஞ்சாலை வரையிலும், போக்குவரத்து சிக்னல்கள், கோவில்கள் என பல இடங்களிலும் ராமர், ஆஞ்சநேயர் படங்கள் பொறித்த காவி தோரணங்கள், கொடிகள் பறக்கின்றன.அயோத்தி ராமர் கோவில் வடிவிலும், ராமர் நிற்பது போன்ற கட் அவுட்களும் முக்கிய சதுக்கங்களில் வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ராமர், ஆஞ்சநேயர் கோவில்களில் கடந்த 10 நாட்களாக ராமர் பஜனைகள் நடந்து வருகின்றன.

சிறப்பு பூஜை

இன்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை, பல்வேறு கோவில்களில், எல்.இ.டி., திரைகளில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு கீழ் உள்ள 35,000 கோவில்களில் இன்று சிறப்பு பூஜை நடத்த ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.இது போன்று, மாநிலத்தின் அனைத்து கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அன்னதானம் செய்யப்படுகின்றன.தங்கவயல் ஆண்டர்சன்பேட்டையின் பி.எம்.சாலையில் உள்ள ராமசந்திரமூர்த்தி கோவிலில், பக்தர்களுக்கு வழங்க 1.50 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.கொப்பால் மாவட்டம், கங்காவதியில் உள்ள அஞ்சனாத்ரி மலை கோவிலில் 500 கிலோ எடை கொண்ட ஒன்பது அடி உயர பஞ்சலோக ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. நாள் முழுதும் சிறப்பு பூஜைகளும், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவதால், சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.மைசூரு அரண்மனை எதிரில் உள்ள கோட்டே ஆஞ்சநேயா கோவில் எதிரில், 111 அடி நீளம் கொண்ட ஊதுபத்தியை, 24 நாட்கள் எரிய வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இன்று ஒரு நாள் மட்டும் 2 மணி நேரம் எரிய வைக்க போலீசார் அனுமதி வழங்கினர்.

வாழ்த்து

அயோத்தி ராமர் கோவிலில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் சிலையை வடிவமைத்தவர் மைசூரின் அருண் யோகிராஜ். அவரது வீட்டிலும் விழா கோலம் பூண்டுள்ளது. பலரும் அவரது வீட்டுக்கு வந்து வாழ்த்து சொன்ன வண்ணம் உள்ளனர். ஹூப்பள்ளி பான் பஜாரில் அயோத்தி ராமர் படங்கள் தயாரிக்கப்பட்டன. இதை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது. படங்கள் காலியாகி விட்டன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,000த்துக்கும் அதிகமான படங்கள் விற்பனையாகி உள்ளன.பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதியில் இன்று சிறப்பு பலராம உற்சவம் நடக்கிறது. தொகுதிக்கு உட்பட்ட 100 கோவில்களில் ராட்சத எல்.இ.டி., திரைகள் மூலம் நேரலையில் ஒளிபரப்பப்படுகின்றன.பத்மநாபநகர் கார்மல் பள்ளி மைதானத்தில், காலை முதல், இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இசை கச்சேரி, பஜனை, லட்ச தீபஉற்சவம் என மைதானமே களை கட்டியுள்ளது.சிவாஜிநகரில் சில கோவில்களில் சுந்தர காண்டம் பாராயணம், சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. மொத்தத்தில், கர்நாடகாவின் பல பகுதிகளும் விழா கோலம் பூண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி