பஞ்சாபில் இண்டி கூட்டணிக்குள் பிளவு: காங்., தலைவர் மீது ஆம் ஆத்மி அரசு வழக்கு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பஞ்சாபில் காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் பர்தாப் சிங் பஜ்வா மீது, ஆம் ஆத்மி அரசு தேச பாதுகாப்பு வழக்கு பதிவு செய்ததால், 'இண்டி' கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தி.மு.க., உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, 'இண்டி' என்ற பெயரில் கூட்டணி அமைத்தன. ஆனாலும், தேர்தலில் அந்த கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்த கூட்டணியிலிருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருகின்றன. 50 வெடிகுண்டுகள்
பஞ்சாபில், 'இண்டி' கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது; முதல்வராக பகவந்த் மான் இருக்கிறார். இங்கு 2017 -- 22 வரை 'இண்டி' கூட்டணியின் மற்றொரு கட்சியான காங்., ஆட்சி நடந்தது. அப்போதைய அமைச்சர்களாக இருந்தவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என காங்., மூத்த தலைவர்கள் பலர் மீது ஊழல் வழக்குகளை தற்போதைய ஆம் ஆத்மி அரசு பதிவு செய்துள்ளது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே இங்கு மோதல் நிலவுகிறது. இதற்கிடையே, போலீஸ் ஸ்டேஷன்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றில் சமீபகாலமாக கையெறி குண்டுகள் வீசும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அவற்றை டயர் வெடிப்பு, சிலிண்டர் வெடிப்பு என போலீசார் கூறி வருவதால், பஞ்சாபை தாண்டி பெரிய அளவில் அந்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், தனியார் செய்தி சேனலுக்கு காங்.,கைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பர்தாப் சிங் பாஜ்வா சமீபத்தில் பேட்டியளித்தார். அதில், 'பஞ்சாப் மாநிலத்துக்கு 50 வெடிகுண்டுகள் வந்துள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவற்றில், 18 குண்டுகள் வெடித்து விட்டன. இன்னும் 32 குண்டுகள் வெடிக்கவில்லை' என, தெரிவித்தார். போலீஸ் ராஜ்யம்
உடனே, பஞ்சாப் மாநில உளவு பிரிவு போலீசார், அவரது வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தியதோடு, வெடிகுண்டுகள் பற்றிய தகவல் எப்படி கிடைத்தது என்றும் விசாரித்தனர். மேலும், தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தை பாஜ்வா நாடினார். அவரது மனுவை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது. என தடை விதித்தது. அடுத்தடுத்த நடவடிக்கைகளால், பஞ்சாபில் 'இண்டி' கூட்டணியில் நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகிறது. 'ஆம் ஆத்மி அரசின் போலீஸ் நெருக்கடியை பார்த்து பயப்படப்போவதில்லை' என பாஜ்வா தெரிவித்துள்ளார். பஞ்சாபில் சட்டம் -ஒழுங்கை சீர்படுத்துவதற்கு பதிலாக, போலீஸ் ராஜ்யத்தை நடத்தி எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதாக அகாலி தளம், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும், முதல்வர் பகவந்த் மான் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. - நமது சிறப்பு நிருபர் -