உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலில் சொந்த காலில் நில்லுங்கள்; அஜித் பவாருக்கு நீதிமன்றம் அட்வைஸ்

தேர்தலில் சொந்த காலில் நில்லுங்கள்; அஜித் பவாருக்கு நீதிமன்றம் அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி,: 'சொந்தக்காலில் தேர்தலில் போட்டியிடுங்கள். சரத் பவாருடன் உங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது. அப்படி இருக்கையில், அவரது பெயரை எதற்காக பயன்படுத்துகிறீர்கள்?' என, மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.மஹாராஷ்டிராவில் செயல்படும் சரத் பவாரின் தேசியவாத காங்., 2023 ஜூலையில் பிளவுபட்டது. அவரது உறவினர் அஜித் பவார், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன், ஆளும் சிவசேனா - பா.ஜ., கூட்டணி அரசுக்கு ஆதரவளித்து, துணை முதல்வரானார். தேசியவாத காங்., பெயர் மற்றும் கட்சியின், 'கடிகாரம்' சின்னத்தை, தேர்தல் கமிஷன் அஜித் பவாருக்கு வழங்கியது. இதை எதிர்த்து, சரத் பவார் தரப்பினர் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மஹாராஷ்டிர சட்டசபைக்கு வரும் 20ல் தேர்தல் நடக்கிறது. ஆளும் 'மஹாயுதி' கூட்டணியின் அங்கமாக அஜித் பவார் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியின், 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி சார்பில், சரத் பவார் தரப்பு களமிறங்குகிறது. சட்டசபை தேர்தலில் கடிகாரம் சின்னத்தை அஜித் பவார் பயன்படுத்த தடை விதிக்கும்படி, சரத் பவார் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

விளம்பரம்

அக்., 24ல் இதை விசாரித்த நீதிமன்றம், 'தேசியவாத காங்கிரசின் கடிகாரம் சின்னம் ஒதுக்கீடு, நீதித்துறை விசாரணைக்கு உட்பட்டது' என, ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடும்படி, அஜித் பவார் தரப்புக்கு உத்தரவிட்டது. இதை அவர்கள் பின்பற்றவில்லை. கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடிகாரம் சின்னம் ஒதுக்கீடு விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக, மராத்தி உள்ளிட்ட நாளிதழ்களில், 36 மணி நேரங்களுக்குள் மறுப்பு செய்தி வெளியிடும்படி அஜித் பவார் தரப்புக்கு உத்தரவிட்டது.இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சரத் பவார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ''சரத் பவார் பெயரை பயன்படுத்தி, வாக்காளர்களிடம் அஜித் பவார் தரப்பினர் ஓட்டு கேட்கின்றனர். ''ஒரு விளம்பரத்தில் கூட, கடிகாரம் சின்னம் ஒதுக்கீடு நீதித்துறை விசாரணைக்கு உட்பட்டது என்ற வாசகம் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அஜித் பவார் தரப்பினர் பின்பற்றவில்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.அப்போது, 'மஹாராஷ்டிரா வாக்காளர்களுக்கு கட்சியில் ஏற்பட்ட பிளவு குறித்து தெரியாது என, சரத் பவார் தரப்பு நினைக்கிறதா?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அபிஷேக் மனு சிங்வி, ''பவார் குடும்பம் என சொல்லி, அஜித் பவார் தரப்பினர் ஓட்டு கேட்கின்றனர். அவர்கள் வெளியிட்ட விளம்பரத்திலும் சரத் பவார் படம், பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

கருத்து வேறுபாடு

அஜித் பவார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பல்பீர் சிங், ''அது பழைய வீடியோ. பேஸ்புக்கில் உள்ளது,'' என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், 'பழைய வீடியோவாக இருந்தாலும் சரி, சரத் பவார் பெயர் ஏன் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது? 'பழைய மற்றும் புதிய வீடியோவாக இருந்தாலும் சரி, அதை கண்காணித்து நீங்கள் வெளியிட வேண்டும். தேர்தலில், நீங்கள் சொந்தக்காலில் நிற்க முயற்சி செய்யுங்கள். சரத் பவாருடன் கருத்து வேறுபாடு உள்ள நிலையில், அவரது பெயரை ஏன் பயன்படுத்துகிறீர்கள்?' என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, நீதிபதிகள் கூறியதாவது:

இந்த நாட்டு மக்கள் மிகவும் புத்திசாலிகள்; ஓட்டளிக்க தெரிந்தவர்கள். சரத் மற்றும் அஜித் பவார் யார் என்பதை அவர்களால் வேறுபடுத்திப் பார்க்க முடியும். வாக்காளர்கள் எப்படி நினைக்கின்றனர் என்பது குறித்து நாங்கள் கூற முடியாது. மேலும் அவர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது. இரு தரப்பினரும் தேர்தல் களத்தில் கவனம் செலுத்துங்கள்; வாக்காளர்களை கவருங்கள். நீதிமன்றத்தின் உத்தரவுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; மதிக்கப்பட வேண்டும்.இவ்வாறு கூறிய நீதிபதிகள், வழக்கை வரும் 19க்கு ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankar
நவ 14, 2024 09:19

இப்படி சொல்ல கோர்ட்டுக்கு உரிமை இருக்கிறதா ?


நிக்கோல்தாம்சன்
நவ 14, 2024 06:28

இந்த அட்வைஸ் மற்றைய மாநில உதிரிகளுக்கும் சொல்லும் தைரியம் இருக்கா நீதிமன்றத்துக்கு


Iniyan
நவ 14, 2024 01:26

நீதி மன்றங்கள் ஒரு சார்பு கட்சியகவே செயல் படுகிறது. எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்க நீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை