தெரு வியாபாரிகள் கணக்கெடுப்பு நிறுத்தி வைக்க வலியுறுத்தல்
புதுடில்லி:தலைநகர் டில்லியில் நடக்கும் தெரு வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணியில், வெளிப்படைத்தன்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்திய ஹாக்கர்ஸ் அலையன்ஸ், டவுன் விற்பனை குழுக்கள், மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் மற்றும் தெரு வியாபாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகள், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:டில்லி மாநகர் முழுதும் தெரு வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. ஆனால், தொழில்நுட்ப குறைபாடுகள், போதுமான தகவல் தொடர்பு மற்றும் சேகரிக்கப்படும் தரவுகளின் துல்லியம் ஆகியவற்றில் வெளிப்படைத் தன்மை இல்லை.இந்த செயல்முறை தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. தெரு வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம் - 2014 மற்றும் டில்லி தெரு வியாபாரத் திட்டம் - 2019 ஆகியவற்றுடன் தற்போதைய கணக்கெடுப்பு முழுமையாக ஒத்துப்போகவில்லை.சில விற்பனையாளர்கள் அதிகாரப்பூர்வ விற்பனைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு முன்பே அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு இல்லை. இந்தக் கணக்கெடுப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். டில்லியின் பொருளாதாரத்தில் தெரு வியாபாரிகளின் பங்கு, குறிப்பிடத்தக்கது.நியாயமான மற்றும் வெளிப்படையான செயல்முறைக்கு தெரு வியாபாரிகள் தயாராகவே இருக்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.