அதிகாரிகள் மீது அரசியல்வாதிகள் கை வைத்தால் கடும் நடவடிக்கை
கடப்பா: ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு உள்ள அன்னமய்யா மாவட்டம், கலிவீடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரியாக இருப்பவர் ஜவஹர் பாபு. சமீபத்தில் இவரை சந்தித்த ஒய்.எஸ்.ஆர்.,காங்கிரசைச் சேர்ந்த சுதர்சனன் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அலுவலக அறையின் சாவியை ஒப்படைக்கும்படி கூறி உள்ளனர்.அதற்கு மறுப்பு தெரிவித்த அவரை திட்டி தாக்கினர். இதனால் காயமடைந்த அரசு அதிகாரி ஜவஹர் பாபு கடப்பாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சந்தித்து துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று ஆறுதல் தெரிவித்தார்.பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒய்.எஸ்.ஆர்.காங்.,கின் அராஜக போக்கை பார்த்து மக்களை அவர்களுக்கு தேர்தலில் படுதோல்வியை தந்த போதும், அவர்களின் திமிர் அடங்கவில்லை. ''கட்சி நிர்வாகிகளை, ஜெகன் மோகன் ரெட்டி கட்டுப்படுத்த வேண்டும். அரசு அதிகாரி மீது கட்சியினர் தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி,” என்றார்.