உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெரு நாய்கள் கடித்து குதறிய மாணவி முகத்தில் 17 தையல்

தெரு நாய்கள் கடித்து குதறிய மாணவி முகத்தில் 17 தையல்

கான்பூர்: உத்தர பிரதேசத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் படுகாயமடைந்த கல்லுாரி மாணவி முகத்தில் 17 தையல்கள் போடப்பட்டன. உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஷ்யாம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி சாஹு, 21. இவர், அங்குள்ள கல்லுாரியில் பி.பி.ஏ., இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 21ம் தேதி, வழக்கம்போல் கல்லுாரி முடிந்து வைஷ்ணவி வீடு திரும்பினார். தான் வசிக்கும் பகுதியில் அவர் நடந்து சென்ற போது, அங்கு குரங்குகளும், தெரு நாய்களும் சண்டையிட்டு கொண்டிருந்தன. அதில், மூன்று தெரு நாய்கள் வைஷ்ணவி மீது திடீரென பாய்ந்தன. முகம், கழுத்து, கை, கால் உள்ளிட்ட இடங்களில் அவரை கடித்து குதறின. தப்பிச் சென்றவரை விடாமல் விரட்டிச் சென்று தெரு நாய்கள் கடித்தன. மாணவியின் அலறல் கேட்டு ஓடி வந்த அப்பகுதியினர் நாய்களை அடித்து விரட்டினர். தெரு நாய்கள் கடித்ததில், வைஷ்ணவியின் தாடை இரு பகுதிகளாக பிளந்தன; மூக்கு, காது உள்ளிட்ட இடங்களில் படுகாயங்கள் ஏற்பட்டன. சம்பவ இடத்துக்கு விரைந்த வைஷ்ணவி குடும்பத்தினர், உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தாடையை ஒட்ட வைக்க அவருக்கு முகத்தில் 17 தையல்கள் போடப்பட்டன. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றை காப்பகங்களுக்கு மாற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தொடர்ந்து விவாதம் நடந்து வரும் சூழலில், இந்த சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

லிங்கம், கோவை
ஆக 24, 2025 05:28

நாய் ஆர்வலர்கள் இந்த சம்பவத்திற்கு ஒரு விளக்கம் கொடுப்பார்கள். நாய்கள் பட்டினியாக கிடந்திருக்கும் சோறு போட்டு இருக்க மாட்டீர்கள் அதனால் தான் கடித்து குதறியது என்று வக்காலத்து வாங்குவார்கள். காரில் செல்லும் நீதிபதிகளுக்கோ பொதுமக்களைப் பற்றி எந்தவித அக்கறையும் கிடையாது. மொத்தத்தில் பாதிக்கப்படுவது ஏழை அப்பாவி மக்கள்தான். வெளிநாடுகளால் தூண்டி விடப்படும் நாய் ஆர்வலர்கள் போல் இந்தியாவிலும் பொதுமக்கள் நாய் எதிர்ப்பை கையில் எடுத்து போராட வேண்டும் அப்பத்தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.


சிட்டுக்குருவி
ஆக 24, 2025 02:55

நீலநிறம் கண்டால் நாய் ஓடிவிடும் என்று கண்டறிந்து இருக்கின்றார்கள் .இதைப்பயன்படுத்தி நீளமான குழாய் ஒன்றை வடிவமைத்து பிளாஸ்டிக்கில் நீலநிறைநீர் ஊற்றி வைத்து சோதித்து பார்த்து வெற்றிபெற்றால் வியாபாரம் செய்யலாம் .நாய்களிடமிருந்து தப்பலாம் .விளையாட்டு பொம்மைகள் வியாபாரிகளிடமும் இந்த குழாய் வடிவிலான பொருள் கிடைக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை