உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு; தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைப்பு

அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு; தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைப்பு

பாலக்காடு; கேரள மாநிலத்தில், மின்சாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் தரநிலைகளின்படி ஆய்வுகள் மேற்கொள்ள, பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மின்சாரத்துறை அணை பாதுகாப்பு தலைமை பொறியாளர் வினோத் கூறியதாவது: அணைகளின் திறனை மதிப்பிடுவதற்கு, தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் தரநிலைகளின்படி ஆய்வுகள் மேற்கொள்ள, பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அறிவியலைப் பயன்படுத்தி அணைகளின் பாதுகாப்பை, தரத்தை மதிப்பிடும். அணைகளின் செயல்பாடு, பராமரிப்பு, கண்காணிப்பு மற்றும் ஆய்வு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான திட்டங்களையும் இந்தக் குழு தயாரிக்கும். மத்திய நீர் ஆணையத்தின் ஓய்வு பெற்ற உறுப்பினரும், அணை பாதுகாப்பு மேலாண்மையில் நிபுணருமான சந்திர சேகர ஐயர் இந்தக் குழுவின் தலைவராக உள்ளார். இந்தக் குழு பல்வேறு துறை தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டுள்ளது. மின்சாரத் துறையிடம், 100 மீட்டருக்கும் அதிக உயரமுள்ள, 18 அணைகள் உள்ளன. இதில் முக்கியமாக, பம்பை, கக்கி, 'அப்பர்' மூழியாறு, செறுதோணி, இரட்டையாறு, கல்லாறு, குண்டள, மாட்டுப்பெட்டி, செங்குளம், பொன்முடி, கல்லார்குட்டி, 'லோயர்' பெரியாறு, பாணாசுரசாகர், குற்றியாடி, கக்கயம், இடமலையாறு, பெரிங்கல்க்குத்து, சோலையாறு ஆகிய அணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்தக் குழு, கடந்த ஐந்து ஆண்டுகளில் அணைகளுக்கு நீர்வரத்து, வெளியேற்றம், அதிகப்பட்ச நீர் இருப்பு உள்ளிட்ட செயல்பாட்டைக் ஆய்வுக்கு உட்படுத்தும். இதில் பருவமழை காலம் உட்பட, எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தேவையான மாற்றங்களை பரிந்துரைக்கும். ஆரம்பகட்ட ஆய்வு முடிந்த பின், குறைபாடுகள் எதுவும் இல்லாத அணைகளில், ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை