கடவுளை வைத்து அரசியல் வேண்டாம் சந்திரபாபுவுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
புதுடில்லி, திருப்பதி லட்டு தொடர்பான சர்ச்சை விவகாரத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் விவகாரங்களில் இருந்து கடவுள்களை விலக்கி வைத்திருக்க வேண்டும் என, கூறியுள்ளது.ஆந்திராவின் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் வழங்கும் லட்டு தயாரிப்பில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.இது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவருமான ஜெகன் மோகன், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.பல வழக்குகள்இந்த விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரியும், கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் கலப்படமில்லாத பொருட்களை பயன்படுத்த உத்தரவிடக் கோரியும், ஹிந்து கோவில்களை மாநில அரசுகள் நிர்வகிப்பதை எதிர்த்தும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, திருப்பதி கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவரும், ஒய்.எஸ்.ஆர்.காங்., மூத்த தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி, வரலாற்று ஆய்வாளர் விக்ரம் சம்பத், வேத விற்பன்னர் துஷ்யந்த் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுக்களை, உச்ச நீதிமன்ற அமர்வு விசாரணைக்கு ஏற்றது.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வு நேற்று கூறியதாவது:கடந்த ஜூலை 6 மற்றும் 12ம் தேதிகளில், தலா இரண்டு லாரிகளில் அனுப்பிய நெய் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.அவற்றில், கலப்படம் செய்யப்பட்டவை என தெரியவந்தது. அதனால், இந்த இரண்டு நாட்களில் வந்த நெய் நிராகரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படவில்லை என கூறப்பட்டுள்ளன.இது தொடர்பாக விசாரணை நடந்து வந்துள்ளது. இதில் சிறப்பு விசாரணை தேவை என்பதை மாநில அரசு உணர்ந்தது.அதன்படி, செப்., 25ம் தேதி எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மேலும், எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணை குழுவையும் மாநில அரசு அமைத்தது.இவ்வாறு இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், செப்., 18ம் தேதி மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசியுள்ளார். அரசியலமைப்புச் சட்டப் பதவியில் உள்ள ஒருவர், அதுவும் மாநில முதல்வர் இவ்வாறு பொதுவெளியில் கூறியது முறையானதல்ல.இதுபோன்ற கருத்துக்கள், கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை பாதிக்கும் என்பதை அவர் உணரவில்லையா? இந்த விவகாரத்தில் மாநில முதல்வர், ஊடகங்களில் செய்தி வெளியிட்டதை ஏற்க முடியாது.பயன்படுத்தவில்லைஉங்களுடைய அரசியலில், கடவுள்களை ஈடுபடுத்தாமல் ஒதுக்கி வைப்பது உகந்ததாக இருக்கும் என்பது எங்களுடைய கருத்து.மாநில அரசு தாக்கல் செய்துள்ள பரிசோதனை முடிவுகள் அறிக்கையிலும், கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நெய், லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படவில்லை என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.அப்படியிருக்கையில், கலப்பட நெய் பயன்படுத்தியதாக முதல்வர் கூறியுள்ளார். முறையான தகவல்கள் இல்லாமல், விசாரிக்காமல் இப்படியா பொறுப்பில்லாமல் பேசுவது.நெய் பரிசோதனை அறிக்கையில், சில அடிக்குறிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன; அவை தெளிவாக இல்லை. மேலும், தேவஸ்தானத்தால் நிராகரிக்கப்பட்ட நெய்யே பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது பயன்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது. இது தொடர்பாக நீங்களே விசாரணைக்கு உத்தரவிட்டு, நடவடிக்கையும் எடுத்துவிட்டு, பொதுவெளியிலும் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?மேலும், ஜூலையில் பரிசோதனை அறிக்கை பெறப்பட்டுள்ளது. அது தொடர்பாக, செப்., 18ல் பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளீர்கள். செப்., 26ல் சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளீர்கள்.இதில் இருந்து, நெய்யில் கலப்படம் உள்ளதா, அது லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டதா என்பதை உங்களால் உறுதி செய்ய முடியவில்லை என்பது தெரிகிறது.அப்படியிருக்கையில், கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக பொதுவெளியில் எப்படி கூறுகிறீர்கள்? அதுவும் மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள முதல்வர் இப்படி பொதுவெளியில், ஆதாரமில்லாத தகவல்களை கூறலாமா?ஒத்தி வைப்புஇதுபோன்ற ஒரு பரிசோதனை அறிக்கை பெறும்போது, அதை உறுதி செய்ய மற்றொரு ஆய்வு மையத்தில் பரிசோதனை செய்யப்பட்டதா. இந்த ஆவணங்களை பார்க்கும்போது, கலப்பட நெய் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் காட்டப்படவில்லை.தற்போதைய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மாநில அரசின் சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையைத் தொடர அனுமதிக்கலாமா அல்லது மத்திய அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடலாமா என்பது குறித்து, சொலிசிட்டர் ஜெனரல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியது.வழக்கு விசாரணை, 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.