ரேவண்ணா மனைவிக்கு முன்ஜாமின் ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா மனைவி பவானிக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமினை ரத்து செய்ய, உச்ச நீதிமன்றம் மறுத்து உள்ளது.ஹாசன் ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. இவரது மகன் பிரஜ்வல், 34. ஹாசன் முன்னாள் எம்.பி., ஆவார். வேலைக்கார பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் கைதான பிரஜ்வல், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட ஒரு வேலைக்கார பெண்ணை கடத்திய வழக்கில், ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.வேலைக்கார பெண்ணை கடத்திய வழக்கில், ரேவண்ணாவின் மனைவி பவானி மீதும் வழக்கு பதிவானது. கைதில் இருந்து தப்பிக்க, உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றார். சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்க பவானிக்கு, நீதிபதி கிருஷ்ணா தீட்சித் உத்தரவிட்டார். அரசியல்
பவானிக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமினை ரத்து செய்ய கோரி, உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் விசாரிக்கின்றனர். மாநில அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க, பவானிக்கு கடந்த ஜூலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும், அரசு தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.இந்நிலையில் நேற்று நடந்த விசாரணையின் போது, கர்நாடக அரசு தரப்பு வக்கீல்கள், 'பவானி சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. மூன்று நாட்களில் அவரிடம் 85 கேள்விகள் கேட்கப்பட்டன. பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் விருப்பத்திற்கு பதில் அளிப்பதை காவல்துறை ஏற்க முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்காததால் முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறினர்.பவானி தரப்பு வக்கீலும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: குற்றப்பத்திரிகை
குற்றம் சாட்டப்பட்டவர், 55 - 56 வயதுடைய பெண். குடும்ப வாழ்க்கையில் பெண்களின் பங்கு முக்கியம். இதனால் அவரை தேவையில்லாமல் காவலில் வைப்பது சரியாக இருக்காது. பெண்கள் கைது செய்யப்பட்டால், ஒட்டுமொத்த குடும்ப அமைப்பும் சரிந்து விடும். வழக்கின் பிரதான குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இதனால், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் நாங்கள் தலையிடும் அவசியம் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் அவரது மகன் குற்றசெயலில் ஈடுபடுவதை தடுக்க தவறியதாக, அரசு தரப்பு கூறுகிறது. வயது வந்த குழந்தைகளை கட்டுப்படுத்தும் பொறுப்பு, தாயிடம் சட்டபூர்வமாக இல்லை.பிரதான குற்றவாளி செய்த தவறுக்கு, குற்றம் சாட்டப்பட்டவர் உடந்தையாக இருந்ததற்கான, எந்த ஆதாரமும் இல்லை. இதனால் அவருக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமினை ரத்து செய்ய இயலாது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பவானி நிம்மதி அடைந்து உள்ளார் - நமது நிருபர் -.