உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐகோர்ட்டில் தேங்கும் வழக்குகள் நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

ஐகோர்ட்டில் தேங்கும் வழக்குகள் நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

புதுடில்லி: உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர், தங்கள் பணிகளை ஒழுங்காக செய்யாமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், 'அவர்களிடம் பள்ளி முதல்வர்களை போல நாங்கள் நடந்து கொள்ள விரும்பவில்லை. ஒவ்வொரு நீதிபதியும் சுய மேலாண்மையுடன் பணி செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளது. ஜார்க்கண்டில், ஆயுள் மற்றும் மரண தண்டனை பெற்ற கைதிகள் சிலர், உயர் நீதிமன்றத்தை நாடிய வழக்கில், பல ஆண்டுகளாக தீர்ப்பு வழங்கப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன. இதையடுத்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர், இரவு பகலாக உழைத்து வழக்குகளில் தீர்ப்பளிக்கின்றனர். துரதிருஷ்டவசமாக, ஒரு சில நீதிபதிகளால் இது போல் தீர்ப்புகள் வழங்க முடியவில்லை. இதற்கு பல சூழல்கள் காரணமாக இருக்கலாம். இருப்பினும், நீதிமன்றங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், தீர்ப்புகளை நீதிபதிகள் விரைந்து வழங்கலாம். ஒரு நீதிபதி, ஒரு குற்றவியல் மேல்முறையீட்டை விசாரிக்கிறார் என்றால், அவர் ஒரு நாளில் 50 வழக்குகளை தீர்க்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு குற்றவியல் மேல்முறையீட்டு வழக்கை, ஒரு நாளில் தீர்ப்பது என்பது மிகப்பெரிய சாதனை. அதேசமயம், ஒரு நாளில் ஒரு ஜாமின் வழக்கில் மட்டுமே தீர்ப்பளிப்பேன் என நீதிபதி கூறினால், அங்கு சுயபரிசோதனை செய்வது அவசியமாகிறது. சில நீதிபதிகள் தேவையில்லாமல் வழக்குகளை ஒத்திவைக்கின்றனர். இந்த விஷயத்தில் பள்ளி முதல்வரை போல் செயல்பட நாங்கள் விரும்பவில்லை. நீதிபதிகள், தங்கள் மேஜையில் கோப்புகள் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய, சுயமேலாண்மையுடன் பணி செய்ய வேண்டும். இவ்வாறு கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு விபரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி