உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., முதல்வர் விஷயத்தில் சஸ்பென்ஸ் நீடிப்பு!: மும்பை ஆலோசனை கூட்டம் ரத்து

மஹா., முதல்வர் விஷயத்தில் சஸ்பென்ஸ் நீடிப்பு!: மும்பை ஆலோசனை கூட்டம் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா முதல்வர் யார் என்பது குறித்த விஷயத்தில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. நேற்று முன்தினம், டில்லியில் அமித் ஷாவுடன் பேச்சு நடத்திய ஏக்நாத் ஷிண்டே, அதில் உடன்பாடு ஏற்படாததால், சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றார். இதையடுத்து, மும்பையில் நடக்கவிருந்த கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மஹாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 230 இடங்களை மஹாயுதி எனப்படும் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.ஆட்சி அமைக்க 145 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக அங்கு பா.ஜ., உருவெடுத்துள்ளது.முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 தொகுதிகளையும், தேசியவாத காங்., 41 இடங்களிலும் வென்றன. வலியுறுத்தல்அதிக தொகுதிகளை வென்றதால், பா.ஜ.,வுக்கு முதல்வர் பதவி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், ஏற்கனவே முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டேவுக்கு அந்த பதவியை வழங்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, சட்டசபைக்கான காலம் முடிவடைந்ததை அடுத்து பதவியை ராஜினாமா செய்த ஷிண்டே, காபந்து முதல்வராக உள்ளார்.புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக மஹாயுதியில் உள்ள மூன்று கட்சியின் மூத்த தலைவர்கள் தனித்தனியாக கூட்டம் நடத்திய நிலையில், பா.ஜ., தலைவர்களை சந்தித்தும் அவர்கள் பேசி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை டில்லியில் நேற்று முன்தினம் இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினர். பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான நட்டாவையும் அவர்கள் சந்தித்தனர். இந்த இரு பேச்சிலும் முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இருப்பினும், இது தொடர்பாக மும்பையில் நேற்று பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே சதாரா மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊருக்கு திடீரென சென்றதால், அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. டில்லியில் நடந்த பேச்சில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே, ஷிண்டே சொந்த ஊர் சென்றதாக கூறப்படும் நிலையில், அதை சிவசேனா கட்சியைச் சேர்ந்தவரும், அமைச்சருமான உதய் சமந்த் மறுத்துள்ளார். விவாதம்''பா.ஜ., தலைமையுடன் நடத்திய பேச்சில் ஷிண்டேவுக்கு அதிருப்தி எதுவும் இல்லை. அவசர வேலையாக சொந்த ஊர் சென்றுள்ளார். அவர் ஊர் திரும்பியவுடன் திட்டமிட்டபடி மூன்று கட்சிகளின் சந்திப்பு நடக்கும்,'' என, அவர் தெரிவித்தார். முன்னதாக அமித் ஷா மற்றும் நட்டா ஆகியோரை சந்தித்த பின் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, ''முதல்வராக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவர்களுடன் விவாதிக்கப்பட்டது. ''இந்த விவாதம் இன்னும் சில நாட்கள் தொடரும். ஓரிரு நாட்களில் முதல்வர் யார் என்பது முடிவாகும். மாநிலத்தில் ஆட்சி அமைய நான் தடையாக இருக்க மாட்டேன். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன்,'' என்றார். இதனால், மஹாராஷ்டிரா முதல்வர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

யாருக்கு எத்தனை அமைச்சர்?

வரும் டிச., 2ம் தேதி புதிய அரசின் பதவி பிரமாணம் நடக்கும் என்றும், புதிய அமைச்சரவையில் பா.ஜ.,வுக்கு 22 இடங்கள் ஒதுக்கப்படும் என்றும், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரசுக்கு முறையாக 12 மற்றும் ஒன்பது இடங்கள் ஒதுக்கப்படும் என்றும், மஹாராஷ்டிர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
நவ 30, 2024 07:46

பேரம் படிய வில்லைன்னு பொருள் காண்க. ஷிண்டேவின் வாரிசுக்கு துணை முதல்வர் பதவி கேக்காருன்னு கேள்விப்படுகிறேன்.


முக்கிய வீடியோ