தேங்காய் கொள்முதல் விலை உயர்வை தடுக்க சிண்டிகேட்
திருப்பூர் 'பண்டிகை காலத்தில், தேங்காய்க்கு தேவை அதிகரித்துள்ள நிலையில், வியாபாரிகள், 'சிண்டிகேட்' அமைத்து, தேங்காய் விலையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்' என, தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாநில தலைவர் பிரபுராஜா குற்றம்சாட்டிஉள்ளார். அவர் கூறியதாவது: வரும், 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, பீஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், தொடர் பண்டிகை நாட்கள் வருகின்றன. பண்டிகைகளுக்கு, தேங்காய் என்பது அவசியமான ஒன்று. இந்நாட்களில் வழக்கத்தை காட்டிலும், தேங்காய் கொள்முதல் அதிகரிக்கும். அதே நேரம், தற்போது தேங்காய் விளைச்சல் குறைந்திருக்கிறது. இத்தகைய சூழலில், தேங்காய் விலை உயர வேண்டும். தற்போது, கிலோ 70 ரூபாய் வரை விவசாயிகள் பெற்று வருகின்றனர். இது, வரும் நாட்களில், 75 முதல், 80 ரூபாயை எட்டுவதற்கும் வாய்ப்பு உண்டு. விவசாயிகளின் தோட்டங்களில் இருந்து கொள்முதல் செய்து, பெரு நிறுவனங்களிடம் வழங்கும் இடைத்தரகர்களாக செயல்படும் வியாபாரிகளும், பெரு நிறுவனத்தினரும் 'சிண்டிகேட்' அமைத்து, விலையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயராமல் தடுக்க முயற்சிக்கின்றனர். ஆண்டு முழுக்க விலையில் ஏற்றத்தாழ்வு மற்றும் சந்தை நிலவரத்தை விவசாயிகள் அறிந்து வைத்திருந்தால், தேங்காய்க்கு அதிக விலை பெற முடியும். இவ்வாறு, அவர் கூறினார். தற்போது விவசாயிகளிடம் கிலோ 70 ரூபாய் வரை தேங்காய் கொள்முதல் பண்டிகை நாட்களில் கிலோவுக்கு 80 ரூபாய் வரை கிடைக்க வாய்ப்பு.