கேரள மத்திய சிறை வளாகத்தில் இருந்து தப்பி ஓடிய தமிழக கைதி
திருச்சூர்: கேரள மத்திய சிறை வளாகத்தில் இருந்து தப்பியோடிய தமிழக கைதியை போலீசார் தேடி வருகின்றனர். இவர் மீது, தமிழகம் மற்றும் கேரளாவில் திருட்டு உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தின் விருதுநகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மீது திருட்டு, தாக்குதல் நடத்தியது உட்பட 50 வழக்குகள், தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ளன. தலைமறைவு ஏற்கனவே, விருதுநகர் கோர்ட்டில் ஆஜராகி அங்குள்ள சிறைக்கு அழைத்து வந்தபோது, தமிழக போலீசாரிடம் இருந்து, பாலமுருகன் தப்பியோடி தலைமறைவான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பின்னர், போலீசார் அவரைப் பிடித்து கைது செய்தனர். இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டம் மரையூர் பகுதியில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சூர் விய்யூர் மத்திய சிறையில் பாலமுருகன் அடைக்கப்பட்டிருந்தார். அவரை, விருதுநகரில் நடந்த வழக்கு விசாரணைக்காக அழைத்து சென்ற தமிழக போலீசார், நேற்று முன்தினம் இரவு வாகனத்தில் திருச்சூர் அழைத்து வந்தனர். வழியில் பாலமுருகன் சாப்பிடுவதற்காக அவரது கைவிலங்கை போலீசார் கழற்றினர். பின்னர் அப்படியே வாகனத்தில் அழைத்து வந்தனர். திருச்சூர் விய்யூர் மத்திய சிறை வளாகத்தை வாகனம் அடைந்ததும், சிறுநீர் கழிக்கச் செல்வதாக கூறிய பாலமுருகனுடன், ஒரு போலீஸ்காரர் மட்டும் இறங்கினார். தேடும் பணி
இருட்டை சாதகமாக பயன்படுத்தி, அருகேயுள்ள தோட்டம் வழியே கைதி பாலமுருகன் தப்பியோடி மெயின்ரோட்டை அடைந்தார். மேலும், அப்பகுதியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடி அதில் தப்பியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக போலீசாருடன், கேரள போலீசாரும் கைதி பாலமுருகனை தேடி வருகின்றனர்.