பீஹாரில் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு! : மஹாகட்பந்தன் கூட்டணியில் முடிந்தது இழுபறி
பாட்னா: பீஹாரில், 'மஹாகட்பந்தன்' கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீண்ட இழுபறிக்கு பின், கூட்டணி தலைவர்கள் இந்த அறிவிப்பை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம், 6 மற்றும் 11ல் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது; 14ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பா.ஜ., தலைமையிலா ன தேசிய ஜனநாயக கூட்டணி யில், ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி, மற்றொரு மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி உள்ளிட்டவை உள்ளன. குழப்பம் தேசிய அளவில், 'இண்டி' கூட்டணி என்றும், பீஹாரில், 'மஹாகட்பந்தன்' கூட்டணி என்றும் அழைக்கப்படும் எதிர்க்கட்சி வரிசையில், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, இந்திய கம்யூ., உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. பீஹாரில், ஆர்.ஜே.டி., எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைமையில், மஹாகட்பந்தன் கூட்டணி தேர்தலை சந்தித்தாலும், முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிப்பது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. அதேசமயம், ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி யாதவ், முதல்வர் வேட்பாளராக தன்னை தானே மறைமுகமாகவும், நேரடியாகவும் அறிவித்து வந்தார். அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க, ராகுல் தயங்கியதே இதற்கு காரணம் என கூறப்பட்டது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளும், இந்த விவகாரத்தில் மவுனம் சாதித்து வந்தன. சமீபத்தில், வெளியான பிரசார போஸ்டர்களில் கூட தேஜஸ்வியின் படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. கூட்டணி தலைவர்களின் படங்கள் எதுவும் இல்லை. இதனால், கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே மோதல் நிலவியது வெளிப்படையாகவே தெரிந்தது. துணை முதல்வர் இது தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவிய நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், பீஹார் வந்து கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து நேற்று முன்தினம் ஆலோச னை நடத்தினார். இந்நிலையில், மஹாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் நேற்று அறிவிக்கப்பட்டார். பாட்னாவில், மஹாகட்பந்தன் கூட்டணி தலைவர்கள் கூட்டாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இது குறித்து, காங்., மூத்த தலைவர் அசோக் கெலாட் கூறுகையில், “காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோரின் ஒப்புதலை தொடர்ந்து, பீஹார் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார். “ கூட்டணியில் உள்ள விகாஸ்ஷீல் இன்சான் கட்சி தலைவர் முகேஷ் சாஹ்னிக்கு துணை முதல்வர் பதவி தர முடிவு செய்யப்பட்டுள்ளது. “எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தபின், கூட்டணியில் உள்ள பிற சமூகத்தைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும்,” என்றார். தேர்வு குறித்து தேஜஸ்வி கூறியதாவது: முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதுதான். ஊடகத்தின் ஊகங்களுக்கு பதிலளிக்கவே இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது. முதல்வராக வேண்டும் என்பது என் விருப்பம் அல்ல. பீஹாரில் மாற்றத்தை ஏற்படுத்தி, ஆட்சியில் உள்ள அரசை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கம். தயங்குவது ஏன்? எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். எதிரணியினர் அப்படி ஒருவரின் பெயரை கூற முடியுமா? நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை சந்திக்கும் பா.ஜ., அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தயங்குவது ஏன்-? மஹாராஷ்டிராவில் வேறொரு கட்சி தலைமையில் தேர்தலை சந்தித்த பா.ஜ., பின்னர் தங்கள் கட்சியை சேர்ந்தவரை முதல்வர் ஆக்கியது. இந்த நிலைமைதான் பீஹாரில் ஏற்படும். தேர்தலுக்கு பின் ஐக்கிய ஜனதா தளத்தை பா.ஜ., அழித்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.